கண்டி, தலதா வீதியில் அமைந்துள்ள தனது கிளை மற்றும் அதன் அதிகாரிகள் சிலருக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை மற்றும் தவறான வழிநடத்தலாகும் எனச் சம்பத் வங்கி (Sampath Bank) மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கி விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில், இக்குற்றச்சாட்டுகளானது அக்கிளையின் வாடிக்கையாளர் ஒருவரினால் பெறப்பட்ட சுமார் 51 மில்லியன் ரூபா பெறுமதியான கடன் வசதி (Loan facility) தொடர்பான முறைப்பாட்டுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் தற்போது நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வங்கி, இந்த விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்து வரும் அதிகாரிகளுக்குத் நிறுவனமும் அதன் அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வங்கியின் அதிகாரிகள் எவரும் விளக்கமறியலில் (Remanded in custody) வைக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைச் சம்பத் வங்கி வன்மையாக நிராகரித்துள்ளது.
இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிலுவையில் உள்ளமையினால், இணையத்தளங்களில் பரப்பப்படும் தவறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுப்பதைத் தவிர, இந்தத் தருணத்தில் மேலதிக கருத்துக்கள் எதையும் வெளியிட முடியாது எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.