” இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), தனது அசுர வளர்ச்சியைக் குறித்து வெளியுலகில் எழும் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் கவனச்சிதறல்களைப் புறக்கணித்துவிட்டு, தனது விளையாட்டில் மட்டும் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அனுர தென்னகோன் (Anura Tennekoon) அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் போட்டியைக் காண்பதற்காகத் தம்புள்ளைக்கு வருகை தந்திருந்த அனுர தென்னகோன், போட்டியின் நிறைவில் 15 வயதான இளம் வீரர் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து தனது ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, இச்சந்திப்பின் போது சூர்யவன்ஷி, தென்னகோனிடம் ஆசீர்வாதம் பெற்றதைத் தொடர்ந்தே இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
“நீங்கள் உங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள், வெளியில் இருந்து வரும் தேவையற்ற சத்தங்களை (Outside noise) முற்றிலும் துண்டித்துவிடுங்கள்,” என்று தென்னகோன் அந்த இளம் வீரரிடம் கூறினார்.
“இன்றைய போட்டியில் துரதிர்ஷ்டவசமாக உங்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதிதான், உங்களால் ஒவ்வொரு நாளும் அதிரடியாக விளையாட முடியாது,” என்றும் அவர் மேலும் ஆறுதல் கூறினார்.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதலாவது அணித்தலைவரான அனுர தென்னகோன், சூர்யவன்ஷியை ஒரு “தலைமுறைக்கான அபார திறமைசாலி” (Generational talent) என்று வர்ணித்ததுடன், அவரது அச்சமற்ற பேட்டிங் முறையையும் வெகுவாகப் பாராட்டினார்.
“ஐபிஎல் (IPL) தொடரில் அவரது பேட்டிங் என்னைக் கவர்ந்தது. அவர் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசும் விதம் உண்மையிலேயே நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. அவர் இதே பாணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்,” என தென்னகோன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் நடைபெற்ற இப்போட்டியில் சூர்யவன்ஷி 21 ஓட்டங்களை (Runs) மாத்திரமே பெற்றிருந்த நிலையில், இலங்கை ஏ அணியிடம் ‘சூப்பர் ஓவர்’ (Super Over) வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஏ அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
