குழு G பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் அணி, தனது இரண்டாவது போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொண்டு கோல்கள் எதுவுமின்றி (0-0) சமநிலையில் முடித்ததைத் தொடர்ந்து, தங்களது ஆடை மாற்றும் அறையில் (Dressing room) இந்த கையெழுத்துக் கடிதத்தை வைத்துச் சென்றுள்ளது.

ஈரான் மற்றும் உலகக் கிண்ணத்தை கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் பின்னணியில், ஈரான் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பாரசீகம் (Persia) முதல் இன்றைய நாகரிக ஈரான் வரை, ஈரானின் ஆன்மா இன்னும் உயிர்ப்புடனும் உறுதியுடனும் உள்ளது” என்று ஈரான் கால்பந்து சம்மேளனம் (FFIRI) வெளியிட்ட அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாங்கள் பெருமையுடன் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்தோம், கௌரவத்துடன் போட்டியிட்டோம், கண்ணியத்துடன் வெளியேறுகிறோம்” என்று அந்த கடிதக் குறிப்பு தொடர்கிறது.

“லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் விருந்தோம்பலுக்கு நன்றி. மேலும், இந்த 180 நிமிடப் போட்டிகள் முழுவதும் ஈரானுக்காக தங்களது இதயம், குரல் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்த ஒவ்வொரு ஈரானியருக்கும் எங்களது நன்றிகள். அனைத்து நாடுகளுக்கும் இடையே அமைதி, மரியாதை மற்றும் நட்பு மலரட்டும்.”

இந்தக் கடிதத்தில், போர் தொடங்கிய முதல் நாளில் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட, குறைந்தது 168 பேர் பலியான கொடூரத் தாக்குதல் குறித்தும் நினைவு கூரப்பட்டுள்ளது.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான தனது முதலாவது போட்டியை 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடித்திருந்த ஈரான் அணி, தனது மூன்றாவது மற்றும் இறுதி குழுநிலைப் போட்டியில் வரும் ஜூன் 27 அன்று சீட்டில் (Seattle) நகரில் எகிப்தை எதிர்கொள்ளவுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், ஈரானின் உலகக் கிண்ணப் பங்கேற்பு தொடர்ந்து பல்வேறு நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டு வருகின்றது.

ஈரான் அணியின் பின்னணிப் பணியாளர்கள் (Backroom staff) பலருக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான விசா மறுக்கப்பட்ட அதேவேளை, போட்டித் தொடங்குவதற்கு முந்தைய நாள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, “நடுநிலைமை, நேர்மை மற்றும் விதிகளைப் பேணுமாறு” சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவிடம் (Fifa) ஈரானிய கால்பந்து சம்மேளனம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக, ஈரான் அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அமெரிக்காவின் அரிசோனாவில் அமைக்கவிருந்த தங்களது பயிற்சி முகாம் தளத்தை, மெக்சிகோவின் டிஹுவானா (Tijuana) பகுதிக்கு மாற்றியமைத்ததுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டு வருகிறது.

வழங்கப்பட்டுள்ள விசா நிபந்தனைகளின்படி, ஈரான் அணி போட்டி நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் மட்டுமே அமெரிக்காவிற்குள் பறக்க அனுமதிக்கப்படுவதுடன், போட்டி முடிந்த அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, நியூசிலாந்துடனான போட்டிக்குத் பின்னர் கருத்துத் தெரிவித்த ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய் (Amir Ghalenoei), இந்தத் தொடரில் தங்களது அணியே “மிகவும் ஒடுக்கப்பட்ட” அணியாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், எகிப்திற்கு எதிரான அடுத்த போட்டிக்கு ஈரான் அணி வந்து செல்வதற்கான நேரக் கட்டுப்பாடுகள் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக வெள்ளை மாளிகையின் உலகக் கிண்ணப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ கியுலியானி (Andrew Giuliani) தெரிவித்துள்ளார்.