BBC
இந்தியாவின் நிதிநுட்ப (Fintech) ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘க்ரெட்’ (Cred) இன் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சமீபகாலம் வரை, குணால் ஷா என்ற பெயர் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் மற்றும் முதலீட்டாளர் வட்டாரங்களுக்குள் மட்டுமே நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது.

க்ரெட் நிறுவனத்தின் நிறுவனரான அவர், தான் உருவாக்கிய வணிகங்களைத் தாண்டி ஒரு தனித்துவமான நன்மதிப்பைத் தன்வசப்படுத்தியிருந்தார். அவரது பாட்காஸ்ட் (Podcast) உரையாடல்கள் பெரும்பாலும் நம்பிக்கை, ஊக்கத்தொகைகள், செல்வ உருவாக்கம் மற்றும் மனித நடத்தை போன்ற தலைப்புகளை நோக்கியே அமைந்திருக்கும். அவரது சமூக ஊடகப் பதிவுகள் செயற்கை நுண்ணறிவு முதல் தத்துவம் வரை பரந்து விரிந்திருக்கும்.
தற்போது, மெட்டா (Meta) நிறுவனம் அவரை வாட்ஸ்அப் அமைப்பை வழிநடத்த நியமித்துள்ளதன் மூலம், அவர் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.
மெட்டா நிறுவனம் ‘க்ரெட்’ இல் மேற்கொண்ட $900 மில்லியன் முதலீட்டைத் தொடர்ந்து இந்த நியமனம் வந்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது வழக்கமான குறுஞ்செய்தி சேவையைத் தாண்டி, பணப்பரிவர்த்தனை (Payments), வணிகச் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தயாரிப்புகளில் தன்னை விரிவுபடுத்த முயன்று வரும் ஒரு முக்கிய காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளி நிர்வாகிகள் உலகின் சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தியிருந்தாலும், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள்ளேயே தனது தொழில் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிய ஒரு நிறுவனரிடம், உலகளாவிய நுகர்வோர் தளத்தைக் கொண்ட இத்தகைய பெரிய நிறுவனத்தின் கட்டுப்பாடு ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வாட்ஸ்அப் உலகளவில் மூன்று பில்லியனுக்கும் (300 கோடி) அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்ககாலப் பின்னணி
மெட்டா நிறுவனத்தின் அழைப்பு வருவதற்கு முன்பே, குணால் ஷா இந்தியாவின் ஸ்டார்ட்-அப் துறையில் ஒரு முக்கிய முகமாக மாறியிருந்தார்.
அவரது முதல் பெரிய வெற்றி 2010 இல் தொடங்கியது. இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வடிவம் பெறத் தொடங்கிய காலத்தில், அவர் ‘ஃப்ரீசார்ஜ்’ (FreeCharge) என்ற மொபைல் ரீசார்ஜ் தளத்தை இணைந்து நிறுவினார்.
இந்நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், 2015 ஆம் ஆண்டில் ‘ஸ்னாப்டீல்’ (Snapdeal) மின்-வணிக நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் கையகப்படுத்தல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
ஃப்ரீசார்ஜ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு, அவர் பல ஆண்டுகள் இளம் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும், அவற்றின் நிறுவனர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டார். ‘ஒய் காம்பினேட்டர்’ (Y Combinator) மற்றும் ‘செகுவொய்யா கேபிடல்’ (Sequoia Capital) ஆகிய ஸ்டார்ட்-அப் ஊக்குவிப்பு அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
மும்பையில் வளர்ந்த ஷா, கல்லூரியில் தத்துவப் பிரிவை (Philosophy) எடுத்துப் படித்தார். இந்தியாவின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனர்களைப் போல அவர் ஐஐடி (IIT) அல்லது ஐஐஎம் (IIM) போன்ற உயரடுக்கு பொறியியல் அல்லது மேலாண்மை நிறுவனங்களில் பயின்றவர் அல்ல.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தனது குடும்ப வணிகத்திற்கு ஆதரவாக முழுநேர வேலை செய்ய வேண்டியிருந்ததால், காலை நேர வகுப்புகளைக் கொண்ட தத்துவப் பாடத்தைத் தான் தேர்ந்தெடுத்ததாக குணால் ஷா தன்னிடம் கூறியதை இந்திய தொழில்முனைவோர் சஞ்சீவ் பிக்சந்தானி எக்ஸ் (X) தளத்தில் நினைவு கூர்ந்திருந்தார்.
க்ரெட் (Cred) நிறுவனத்தின் எழுச்சியும் விமர்சனங்களும்
2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘க்ரெட்’ (Cred) நிறுவனம், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்துபவர்களுக்குப் பரிசுகளை வழங்கும் ஒரு எளிய வணிக மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் பின்னர் கடன்கள், காப்பீடு, வர்த்தகம் மற்றும் செல்வ மேலாண்மை தயாரிப்புகள் வரை விரிவடைந்தது.
மெட்டாவின் சமீபத்திய முதலீட்டின் மூலம் க்ரெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது சுமார் $4.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் எதிர்பாராத பிரபலங்களின் பங்களிப்புடன் க்ரெட் நிறுவனம் வெளியிட்ட விளம்பரப் பிரச்சாரங்கள் அதற்குப் பெரும் பிரபல்யத்தைத் தேடித்தந்தன.
இருப்பினும், அதன் வளர்ச்சி பல விமர்சனங்களையும் எதிர்கொண்டது. பிராண்டிங் மற்றும் வளர்ச்சியில் பாராட்டப்பட்டாலும், அதன் லாபத்தன்மை (Profitability) குறித்து பல ஆண்டுகள் கேள்விகள் எழுப்பப்பட்டன. லாபமற்ற வணிகங்களை ஏன் கொண்டாட வேண்டும் என்ற சமூக ஊடக விவாதத்திற்குப் பதிலளித்திருந்த ஷா, லாபகரமான வணிகங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அபாயங்களை எதிர்கொள்வதிலும் ஸ்டார்ட்-அப் கலாசாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
ஸ்டார்ட்-அப் கொள்கை மன்றத்தின் (Startup Policy Forum) தலைமை நிர்வாகி ஸ்வேதா ராஜ்பால் கோஹ்லி, பிபிசி-யிடம் பேசுகையில், “ஒழுங்குமுறை சிக்கல்களுக்குள் தயாரிப்பு வடிவமைப்புக்கான பார்வையைக் கொண்டுவரும் அரிய திறன் குணால் ஷாவிடம் உள்ளது” என்று பாராட்டினார்.
வாட்ஸ்அப்பில் புதிய சவால்

வாட்ஸ்அப் தற்போது குறுஞ்செய்திகளைத் தாண்டி பணப்பரிவர்த்தனை மற்றும் வணிகச் சேவைகளை நோக்கி நகர்வதால், கடந்த பத்தாண்டுகளாக இந்தத் துறைகளில் அனுபவம் வாய்ந்த குணால் ஷாவின் நியமனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப்பை வழிநடத்தும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
இது குறித்து தொழில்நுட்ப செய்தி இணையதளமான ‘மீடியாநாமா’ (MediaNama) இன் நிறுவனர் நிகில் பஹ்வா பிபிசி-யிடம் கூறுகையில்:
“நிதிநுட்பம் மற்றும் பணப்பரிவர்த்தனை பின்னணி மட்டுமே இதற்குக் காரணம் என்று கருதுவது மிகவும் குறுகிய பார்வையாகும். அவர் நுகர்வோர் நடத்தை மற்றும் வளர்ச்சி குறித்து பல வருடங்களாகச் சிந்தித்து வரும் ஒரு நபர். எனவே, இது வெறும் பணப்பரிவர்த்தனைக்கான நியமனம் அல்ல; மாறாக ஒரு பெரிய நுகர்வோர் வணிகத்தை உலகளவில் விரிவுபடுத்திய அனுபவமுள்ள ஒரு நிறுவனரை மெட்டா தேர்ந்தெடுத்துள்ளது என்றே பார்க்க வேண்டும்.”
இந்த நியமனம் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், குணால் ஷாவின் “புத்தாக்கச் சிந்தனை” (Builder mentality) மற்றும் “உலகளாவிய பார்வை” (Global perspective) ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
உலகளவில் பில்லியன்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் போன்ற ஒரு பிரம்மாண்ட தளத்தில், குணால் ஷாவின் தயாரிப்புத் திறனும், வணிக மேலாண்மையும் எவ்வாறு வேலை செய்யப்போகின்றன என்பதை இனிவரும் காலம் தீர்மானிக்கும்
