தேர்வுகளில் முறைகேடு செய்ய உதவும் AI கண்ணாடிகள்: ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் புதிய சவால்

CNN

ஜான் லியூ (John Liu)

பாடசாலைகளில் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, மாணவர்கள் தங்களுக்குள் பார்த்து எழுதுவது, உள்ளங்கையில் குறித்து வைப்பது அல்லது துண்டுச் சீட்டுகளைப் பயன்படுத்துவது எனப் பல்வேறு வழிகளில் முறைகேடுகளில் (Cheating) ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற கடுமையான மன அழுத்தத்தினாலும், மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ‘ஸ்மார்ட் கண்ணாடிகளை’ (Smart glasses) நாடத் தொடங்கியுள்ளனர். ஒரு தேர்வினது முடிவு, ஒரு மாணவனின் ஒட்டுமொத்த எதிர்கால உத்தியோகம் மற்றும் சமூக அந்தஸ்தையே தீர்மானிக்கும் காரணியாக விளங்கும் கிழக்கு ஆசியாவின் தேர்வு மையச் சமூகங்களில், கல்வியாளர்கள் இந்த விவகாரத்தைக் கையாள்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் மட்டும், தென்கொரியாவில் ஆங்கில மொழித் திறன் மதிப்பீட்டுத் தேர்வின் போது (இத்தேர்வு முடிவுகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு நியமனங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன), ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட முயன்ற இருவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

அதேபோல் தைவானில், முன்னணி மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கான நுழைவுத் தேர்வின் போது, மாணவர் ஒருவர் விசித்திரமான முறையில் தேர்வுக் தாளைப் பார்ப்பதை அவதானித்த தேர்வு மேற்பார்வையாளர்கள் (Proctors), அவரிடம் சோதனையிட்டனர். இதன்போது, அவர் அணிந்திருந்த ஸ்மார்ட் கண்ணாடியின் சட்டகம் (Frame) அதிக வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வித் துறைக்கு எழுந்துள்ள அழுத்தம்

ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் தேர்வுகளில் முறைகேடு செய்வது புதிய விஷயமல்ல என்றாலும், இவை தற்பொழுது மிகவும் மலிவாகவும், சாதாரணக் கண்ணாடிகள் போன்ற வடிவிலும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களை மதிப்பீடு செய்யும் பாரம்பரியக் கல்வித் திட்டம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. பரந்தளவில் பார்த்தால், இந்தத் தொழில்நுட்பமானது மாணவர்களின் கற்றல் திறனுக்கும், முறைகேடு செய்வதற்கான ஆபத்துகளுக்கும் இடையிலான சமநிலையை எப்படிக் கையாள்வது என்ற விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

இதன் காரணமாக, பல நாடுகள் தேர்வு எழுதுபவர்களுக்கான சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

  • சீனாவில்: ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான மாணவர்கள் எழுதும் கடினமான ‘காவ்காவ்’ (Gaokao) பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில், இந்த மாதத் தொடக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களது கண்ணாடிகளையும் முழுமையாகப் பரிசோதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

  • பிரித்தானியாவில் (UK): தேர்வு கண்காணிப்பு அமைப்பின் தலைவர், AI கண்ணாடிகள் மற்றும் காதில் பொருத்தப்படும் நுண்ணிய சாதனங்கள் (Earpieces) தேர்வுகளில் முறைகேடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்துள்ளார்.

தென்கொரியாவில் பதிவான இரு சம்பவங்களும், அங்கு AI கண்ணாடிகள் மூலம் முறைகேடு செய்யப்பட்ட முதலாவது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளாகும். இதனைத் தொடர்ந்து, தேர்வு அறைகளுக்குள் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், AI கண்ணாடிகளைத் தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்துக் கல்வி அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாகத் தென்கொரியத் தேர்வு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழக விரிவுரையாளர் தாமஸ் கோர்பின் (Thomas Corbin) இது குறித்துக் கூறுகையில், “வெளியே தெரிவது ஒரு சில சம்பவங்கள் மட்டுமே, ஆனால் வெளிவராமல் மறைந்திருக்கும் சம்பவங்கள் மிக அதிகமாக இருக்கக்கூடும்” என அச்சம் வெளியிட்டுள்ளார்.

“2022 ஆம் ஆண்டில் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) கட்டுரை எழுதும் முறைக்கு எத்தகைய சவாலாக இருந்ததோ, அதேபோன்றதொரு சவாலைத் தற்பொழுது ‘அணியக்கூடிய AI’ (Wearable AI) சாதனங்கள் தேர்வுகளுக்கு ஏற்படுத்தியுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

ஒரு வருடத்திற்கு முன்பு, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) உதவிப் பேராசிரியர் மெங் ஜிலி (Meng Zili), தேர்வு அறையில் மாணவர் ஒருவர் அணிந்திருந்த ஸ்டைலான கண்ணாடியைக் கவனித்தார். அது சாதாரணக் கண்ணாடிதான் என்றாலும், வணிகரீதியான AI கண்ணாடிகள் தேர்வுகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பரீட்சித்துப் பார்க்க அது அவருக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது.

அவரது ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன. தேர்வுத் தாளை வெறுமனே பார்ப்பதன் மூலம், அந்தக் கண்ணாடியானது கேள்விகளை அதனுடன் இணைக்கப்பட்டுள்ள AI இன் பெரிய மொழி மாதிரிகளுக்கு (LLMs) அனுப்பி வைக்கிறது. அந்த மாதிரிகள் உருவாக்கும் பதில்கள் உடனடியாகக் கண்ணாடியின் லென்ஸ்களில் (Lenses) திரையிடப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட மின்பொறியியல் பாடத் தேர்வில், அந்த சாதனம் பெற்ற மதிப்பெண்கள், 100 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்ததோடு, சராசரி மதிப்பெண்ணான 72 ஐ விட மிக அதிகமாகக் காணப்பட்டது.

“இந்த பரிசோதனைக்குப் பிறகு, தற்போதைய AI இன் பேராற்றலைக் கருத்தில் கொள்ளும்போது, மாணவர்கள் தேர்வுகளுக்காக எவ்வளவு விஷயங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், அல்லது மதிப்பீடுகளின் போது AI ஐப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்ற கேள்விகள் எழுகின்றன” என பேராசிரியர் மெங் கூறுகிறார்.

இந்தத் திட்டத்தை இணைந்து வழிநடத்திய பேராசிரியர் ஜாங் ஜூன் (Zhang Jun) கூறுகையில், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் கல்வித் துறை திணறி வருவதாகக் குறிப்பிட்டார். “நாம் எவ்வாறு கற்பிக்கிறோம் மற்றும் மாணவர்களை எவ்வாறு மதிப்பீடு செய்கிறோம் என்பதைப் பற்றி நாம் எவ்வளவு விரைவாக மறுசிந்தனை செய்து மாற்றியமைக்கப் போகிறோம் என்பதே இப்போதைய உண்மையான கேள்வி” என்றார்.

இருப்பினும், கல்வித் துறையில் இது பெரிய இடையூறாக இருந்தாலும், AI இன் ஆற்றல் காரணமாக அதன் பயன்பாட்டைத் தடுக்கக் கூடாது என்று ஹாங்காங் கல்விப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோங் சியு சியுங் (Kong Siu Cheung) தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக, மாணவர்கள் AI ஐ மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பதைத் தடுக்க, அவர்களின் சுய சிந்தனைத் திறனை (Thinking capabilities) வளர்ப்பதில் கல்வி முறை கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாம் தொழில்நுட்பத்தையும் AI ஐயும் பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர்க்குமாறு கூறக் கூடாது… ஆனால், மிக முக்கியமான அடிநாதம் என்னவென்றால்: உங்களுடைய சுய சிந்தனைத் திறனை மற்றொரு சாதனத்திடம் அடகு வைத்துவிடாதீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு