இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் (AASL) இலத்திரனியல் மற்றும் வான்செலவுகொள்ளல் பொறியியல் (E&ANE) பிரிவானது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் ‘விமான நிலைக்காட்சி அமைப்பு’ (Air Situation Display System) ஒன்றினை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளதுடன், இதன் மூலம் வான் போக்குவரத்து மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பானது, வான் சூழல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், அருகிலுள்ள இந்திய விமான தகவல் பிராந்தியத்திலிருந்து (Indian Flight Information Region) வருகை தரும் வெளிச்செல்லும் விமானங்களை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (air traffic controllers) துல்லியமாக அடையாளம் காண்பதற்கான திறனை வலுப்படுத்துவதன் மூலம், நீண்டகாலமாக நிலவி வந்த செயல்பாட்டுத் தேவையொன்றைப் பூர்த்தி செய்கிறது.
கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் குறைந்த உயரம் காரணமாக, விமானங்கள் வருவதைக் காட்சி ரீதியாக (visually) கண்டறிவதில் கட்டுப்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதன் மூலம், குறிப்பாக மோசமான வானிலை நிலைமைகளின் போது செயல்பாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த இந்தத் தரம் உயர்த்தல் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் அமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ரேடார் தரவு, பிதுருதலாகல ரேடார் தரவு மற்றும் BIA ஊடாக CES/RMA இலிருந்து பெறப்படும் தானியங்கி சார்பு கண்காணிப்பு-ஒளிபரப்பு (ADS-B) தரவு உள்ளிட்ட பல கண்காணிப்பு உள்ளீடுகளை ஒருங்கிணைத்து, தொடர்ச்சியான, நம்பகமான மற்றும் துல்லியமான விமானக் கண்காணிப்புத் தகவல்களை உறுதி செய்கிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட கண்காணிப்புத் திறனானது, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் விமானச் சிப்பந்திகளும் விரைவான மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம், செயல்பாட்டு மீள்திறனை (operational resilience) மேம்படுத்துவதுடன் பாதுகாப்பு அபாயங்களையும் குறைக்கும் என்று AASL தெரிவித்துள்ளது.
