யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய தனிநபர் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றினார்.
யாழ்ப்பாணத்தை சர்வதேச அளவில் கலாசார மற்றும் பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக்கி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் பொருளாதார வளர்ச்சியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதே இப்பிரேரணையின் பிரதான நோக்கமாகும்.
பிரேரணையில் மாவட்டச் செயலகங்களில் சுற்றுலா அபிவிருத்தி அலகுகள் அமைத்தல், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தி சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகளை அதிகரித்தல், சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கடல்சார் சுற்றுலா, நீர்க்குதியல் மற்றும் நீர்விளையாட்டுகள், வட மாகாணத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்துதல், நெடுந்தீவிற்கான படகுப் போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்குதல் போன்ற திட்டங்களும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அரசு–தனியார் கூட்டாண்மை (PPP) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை நிலையான சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது பிரேரணையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது இந்த முன்முயற்சி வட மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிலையான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
See less
