வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வையற்ற சலுகைகளை (Enhanced duty-free allowances) அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் (14 ஆம் திகதி) வெளிவிவகார அமைச்சில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக முறையான வங்கி வழிகள் (Formal banking channels) ஊடாகப் பணத்தை நாட்டுக்கு அனுப்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கும் வகையில் தற்போதுள்ள முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சுங்க நடைமுறைகளை எளிமையாக்குதல், தீர்வையற்ற சலுகைகளைப் பணப்பரிமாற்றப் பதிவுகளுடன் (Remittance records) இணைத்தல், கடன் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கத் திணைக்களம், வர்த்தக வங்கிகள் மற்றும் ‘லங்கா ரெமிட்’ (Lanka Remit) ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விவகாரங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.
“முன்மொழியப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிப்பதையும், தீர்வையற்ற சலுகைகளை எளிதாக அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
