மேற்கிந்திய தீவுகள் அணியின் புகழ்பெற்ற சகலதுறை வீரரான கார்ஃபீல்ட் சோபர்ஸின் (Sir Garfield Sobers) மறைவு உலக கிரிக்கெட் ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அவருக்குத் தங்களது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
இந்த மாத இறுதியில் (ஜூலை 28) தனது 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையிலேயே காரி சோபர்ஸ் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் இல்லை என்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்” – அர்ஜுன ரணதுங்க:
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்அர்ஜுன ரணதுங்க, தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதில் சோபர்ஸ் எவ்வாறு முக்கியப் பங்கு வகித்தார் என்பதைத் தனது சமூக ஊடகப் பதிவில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்:
” சோபர்ஸின் மறைவு கிரிக்கெட் உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியாகும். கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் காரியின் மரபுக்கு (Legacy) எவருமே இணையாக முடியாது. அவர் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். எனது இளமைக் காலத்தில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது தொடர்ச்சியான வழிகாட்டுதல் மட்டும் இல்லாதிருந்தால், நான் இன்று இருக்கும் கிரிக்கெட் வீரராக மாறியிருக்க மாட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 80 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான் கலந்துகொண்டது எனது பாக்கியம்.
அவர் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார், ஆனால் எனக்கு ஒரு நெருங்கிய நண்பராக விளங்கினார். எவருமே என்னிடம் திறமையைக் காணாதபோது, காரி மட்டுமே என்னம்பிக்கை வைத்தார். என்னை எங்கோ ஒரு இடத்திலிருந்து கொண்டு வந்து, எனக்கான பாதைகளை அவரே சீரமைத்துக் கொடுத்தார். எனது சாதனைகள் அனைத்தும் அவரது மரபின் பிரதிபலிப்பேயாகும்,” என்று ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுக டெஸ்ட் போட்டியின் போது, 18 வயது இளைஞனாக இருந்த அர்ஜுன ரணதுங்கவை அணியில் தேர்வு செய்ததும், பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது மீண்டும் அணிக்குள் திரும்புவதை உறுதி செய்ததும் சோபர்ஸ் தான் என்பதை ரணதுங்க தனது பழைய நேர்காணலொன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.
சனத் ஜயசூரிய மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் அஞ்சலி:

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய தனது இரங்கல் செய்தியில், “கிரிக்கெட் விளையாட்டு கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கார்ஃபீல்ட் சோபர்ஸின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இலங்கை கிரிக்கெட்டுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருந்த அவரது பங்களிப்பு என்றும் மறக்கப்படாது,” என்று தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் உலக கிரிக்கெட் சமூகத்திற்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அஞ்சலோ மெத்தியூஸ் விடுத்துள்ள செய்தியில், “திறமை, எளிமை மற்றும் உன்னதமான மரபு ஆகியவற்றால் தலைமுறைகளைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமை சோபர்ஸ். அவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர் மட்டுமல்ல, பெருமைக்கான (Greatness) இலக்கணத்தையே அவர்தான் வகுத்துக் கொடுத்தார்,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) அதிகாரப்பூர்வ அறிக்கை:
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காரி சோபர்ஸின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், குறிப்பாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக (Coach) சர் காரி சோபர்ஸ் பணியாற்றி இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதை SLC நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளது.
