கொழும்பு, ஜூலை 22:
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜாலிய விக்கிரமசூரிய தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், தூதரகக் கட்டடம் ஒன்றை விசேடமாகக் கொள்வனவு செய்ததில் சுமார் 3 இலட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை (USD 332,000) முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், அவர் நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்து வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த சமர்ப்பணங்களைக் பரிசீலித்த நீதவான் பசான் அமரசேன இந்த பிடியாணையைப் பிறப்பித்தார். அத்துடன், முன்னர் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அவரது பிணையாளர்களுக்கு நீதவான் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
இவ்விவகாரம் தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் அடிப்படையிலான மேலதிக சமர்ப்பணங்களுக்காக வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
