செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் சீனாவுடனான போட்டியில், தங்களின் கூட்டணியில் உள்ள நாடுகள் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், சீனாவின் AI அமைப்புகளுடன் இணையும் நாடுகள் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இருந்து நீக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்க ஆயத்தமாகி வருகிறது.
அமெரிக்கா கடந்த ஆண்டு “Pax Silica” என்ற திட்டத்தைத் தொடங்கி, AI மாதிரிகள், குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் அத்தியாவசிய கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்துள்ளன.
அதேவேளை, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜூலை மாதம் “உலக செயற்கை நுண்ணறிவு கூட்டுறவு அமைப்பை” (World Artificial Intelligence Cooperation Organization) உருவாக்கி, அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். இதில் கசகஸ்தான் இரண்டு அமைப்புகளிலும் இணைந்துள்ளமை வொஷிங்டனில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ள வரைவுக் கடிதத்தில், “ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க முடியாது; நாடுகள் தங்களின் தேர்வைத் தெளிவாகச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனாவிற்கு தொழில்நுட்ப வளங்கள் மற்றும் கனிமங்கள் கிடைப்பதைத் தடுத்து, இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தில் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்
