இலங்கைக்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு கோட்டையைச் சேர்ந்த பணமாற்று முகவர் ஒருவர் மூலம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் 4 தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்கள் 4 பேர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு வங்கி முகாமையாளர்களும் அவரவர் பணிபுரிந்த தனியார் வங்கிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவத்திற்காக வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.
இம்மோசடியின் முக்கிய சந்தேகநபர், கைது செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் லஞ்சப் பணம் வழங்கி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாரத்திற்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 1,00,000 ரூபாய் வரை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முகாமையாளருக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் (1 மில்லியன்) வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
