இலங்கையில் ‘பெண் தொழில்முனைவோர் நிதிச் சட்டக்கோவையின்’ (WEFC) முதலாவது வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையின்படி (2025/2026), பெண் தொழில்முனைவோருக்காக சுமார் 145.5 பில்லியன் ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப உதவியுடன் 2025 மார்ச் மாதம் தேசிய அளவில் இச்சட்டக்கோவையை அமல்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் இதனை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது.
நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் முக்கிய அவதானிப்புகள்:
-
கடன் பெறல் மற்றும் நிதி ஒதுக்கீடு: இத்திட்டத்தில் இணைந்துள்ள 13 நிதி நிறுவனங்கள் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (MSME) பெண் தொழில்முனைவோருக்கு 36,087 வர்த்தகக் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
-
நிதி ஒதுக்கீட்டு இடைவெளி: மொத்தமாக அனுமதிக்கப்பட்ட MSME கடன்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு 30% ஆக உள்ள போதிலும், கடன்களின் நிதி மதிப்பில் (Monetary value) அவர்களுக்கு 20% மாத்திரமே கிடைத்தடைந்துள்ளது.
-
தேசிய வரைவிலக்கணம்: பெண் தொழில்முனைவோரை முறையாக அடையாளங்காண இலங்கை மத்திய வங்கி மூலம் ஒரு ஒருங்கிணைந்த தேசிய வரைவிலக்கணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாலின ரீதியாகப் பிரிக்கப்பட்ட நிதித் தரவுகளை வழங்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ரீதியாகச் செயல்படும் சனத்தொகையில் பெண்கள் 34% ஆக உள்ளபோதிலும், பிணையின்மை (Collateral), டிஜிட்டல் தொழில்நுட்பமின்மை மற்றும் முறையான சந்தை வாய்ப்புகள் இன்மையால் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இதைக் நிவர்த்தி செய்யும் வகையில் 2026 மே முதல் 2030 மே வரையிலான 4 ஆண்டுகளுக்கான “தேசிய பாலின உள்ளடக்கிய நிதிச் செயற்பாட்டுத் திட்டத்தையும்” அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
MORNING TELEGRAPH
