இலங்கை மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டபூர்வ இலக்கை தொடர்ச்சியாக எட்டு காலாண்டுகளாக அடையத் தவறியுள்ளதாகவும், பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் நடைமுறை முடங்கியுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்பில் இலங்கை-கொரியா வர்த்தக பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டக் கலந்துரையாடலில் வெரிடே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் மற்றும் அட்வொகாடா நிறுவனத்தின் (Advocata Institute) தலைவர் முர்தாசா ஜாபர்ஜி ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டனர்.
கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட முக்கிய அவதானிப்புகள்:
-
சட்டபூர்வ இலக்கு மீறல்: 3-7% வரையிலான பணவீக்க வரம்பை (5% சராசரி இலக்கு) பேண வேண்டிய சட்டக் கடப்பாடு இருந்தபோதிலும், மத்திய வங்கி தொடர்ந்து 8 காலாண்டுகளாக அதனை தவறவிட்டுள்ளது. 2025 பெப்ரவரியில் பணவீக்கம் மறை 4.2% (-4.2%) வரை சரிந்தது.
-
பொறுப்புக்கூறல் இன்மை: பணவீக்க இலக்கை தவறவிடும் பட்சத்தில், அதற்கான காரணங்களை பாராளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ விதிமுறை நடைமுறையில் இருந்தும், அது தொடர்பாக பாராளுமன்றம் முறையான கேள்விகளை எழுப்பத் தவறிவிட்டது.
-
உயர் வட்டி வீதங்கள்: பணவீக்கம் வீழ்ச்சியடைந்த போதிலும் அரசாங்கம் அதிக வட்டி செலுத்தியதால், பிராந்தியத்திலேயே மிக அதிக மற்றும் நிலையற்ற ‘உண்மையான வட்டி வீதங்கள்’ (Real Interest Rates) இலங்கையில் உருவானது.
-
கொள்கை தவறுகள்: வழங்கல் ரீதியிலான நெருக்கடிகள் எழுந்தபோது வட்டி வீதங்களைக் குறைத்து உள்நாட்டுத் தேவையை ஊக்கப்படுத்த தவறிய மத்திய வங்கி, அண்மையில் ஏற்பட்ட தற்காலிக எரிசக்தி விலை உயர்வின் போது கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் (8.75% ஆக) உயர்த்தியமை தவறான அணுகுமுறை என விமர்சிக்கப்பட்டது.
பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் கடன் சுமையைக் குறைக்கவும் வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை நீக்குவதே முக்கிய வழி என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
