அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டுவருவதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்
புதிய சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டதாவது

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுகின்ற போது அவருடைய பிரதான கோஷங்களில் ஒன்றாகயிருந்தது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்பதுதான்.
ஆனால் அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருகின்றார்கள். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம் என்ற பெயரிலேயே இதனை கொண்டுவருகின்றனர்.
இந்த சட்டம் இதுவரைக்கும் இருக்ககூடிய சட்டங்களில் மிகவும் கொடிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை விட மிகவும் கொடுமையானது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 40வருடங்களுக்கு மேல் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காரணங்களின்றி படையினராலும் காவல்துறையினராலும்,மற்றும் துணைகுழுக்களாலும் கைதுசெய்யப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மாத்திரமின்றி பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் நடைபெற்றுள்ளது.
எங்களுடைய மக்கள் தாங்கள் ஆசைஆசையாக பெற்றுவளர்த்த தங்களின் பிள்ளைகளை அவர்கள் சிறைக்கூடங்களில் பார்க்கவேண்டிய நிலைமைதான் கடந்த 40 வருடங்களுக்கு மேல் காணப்பட்டது.
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்த ஒரு நேரத்தில் புதிய சட்டத்தை கொண்டுவந்து அந்த சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களை முற்றிலும் இருளுக்குள் தள்ளுகின்ற முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் இதனை நாங்கள்அ முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
புதிய சட்டமூலம் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகின்றது,கைதுசெய்வதற்கு சித்திரவதை செய்வதற்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகின்றது என கஜேந்திரன் தெரிவித்தார்.
