உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்:
-
இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு: செம்மணி பகுதி ஆய்வுகள் தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் தயாரிக்கப்பட்ட விரிவான இடைக்கால அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
-
சி.ஐ.டி. அறிக்கைகள்: குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் வழக்கு தொடர்பான இரண்டு முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
-
விசாரணைக்கான அனுமதி: கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம், மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த அனுமதி கோரி சி.ஐ.டி கோரிக்கை விடுத்திருந்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி அளித்ததுடன், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னரே அடுத்தகட்ட மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பின்னணி:
கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசாமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
அந்த வழக்கு விசாரணைகளின் போது, சோமரத்ன ராஜபக்ஷ அளித்த வாக்குமூலத்திலேயே செம்மணிப் பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் இருக்கும் அதிர்ச்சித் தகவல் முதன்முதலாக வெளியுலகிற்கு அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.