அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் ஊடக சுதந்திரத்தை முடக்கும்: கூட்டு எதிர்க்கட்சி

தற்பொழுது பெரும் பேசும்பொருளாக மாறியுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம், இலங்கையில் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் என கூட்டு எதிர்க்கட்சி (JO) நேற்று தெரிவித்துள்ளது.

“அரசாங்கம் அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கூடிய விரைவில் இயற்ற முனைகிறது. இந்தச் சட்டம் நாட்டின் ஊடக சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவரும். அதற்கமைய, இது ஊடக நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அழிவுக்கு வழிவகுக்கும். மேலும், இது முழு ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும்,” என கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“தகவல்களை அறிக்கையிடுவதே ஒரு ஊடகவியலாளரின் கடமையாகும். இந்தச் சட்டமூலத்தின் கீழ், ஒரு செய்தியை வெளியிடுவதை ஒருவர் எதையேனும் செய்யத் தூண்டும் செயலாகக் கருத முடியாது. இருப்பினும், ஒரு ஊடக அறிக்கையை பயங்கரவாதச் செயலாகக் கருதுவதற்கு இந்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”

“323 கொள்கலன்கள் (Containers) காணாமல் போனமையையும், தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டமையையும் ஊடகவியலாளர்களே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர். ஊடகவியலாளர்கள் இவ்விடயங்களை ஆராய்ந்து தமது கண்டுபிடிப்புகளைப் பதிவிட்டனர். அவர்கள் பொதுவாகத் தமது தகவலாளர்களிடமிருந்தே (Sources) தகவல்களைப் பெறுகின்றனர். அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலமானது, ஊடகவியலாளர்கள் தமது தகவலாளர்களை வெளிப்படுத்தக் கட்டாயப்படுத்தும் விதத்திலான சரத்துக்களைக் கொண்டுள்ளது. தகவலாளர்களின் அடையாளங்களை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டால், அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற முடியாமல் போகும். அந்த வகையில், இச்சட்டமூலம் செய்தி அறிக்கையிடலையே முடக்கிவிடும்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஊடகச் சந்திப்புகள், பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இச்சட்டமூலத்தில் உள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

“கருத்தரங்குகள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பேரணிகளையும் ஊடகங்கள் செய்தி சேகரிக்கின்றன. இவை அனைத்தையும் தடை செய்வதற்கு அரசாங்கத்திற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.

“இச்சட்டமூலத்தில் தீவிரமான சிக்கல்கள் உள்ளன. முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் சந்தேகத்திற்குரியதாகவும் மிகவும் விரிவானதாகவும் உள்ளது. உலகளவில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் இவ்வளவு பரந்ததாக இருக்கும் வேறு எந்தவொரு சட்டமும் இல்லை.”

“தொல்பொருள் தளங்கள், பொது சுகாதாரம் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு ஆகியவை இச்சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவிலான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்திலேயே இந்தப் பகுதிகளைச் சேர்த்திருக்க முடியும். இருப்பினும், இச்சட்டமூலத்தில் அத்தகைய பாதிப்பு எல்லை (Threshold) எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது அனைவரையும் ஆபத்தில் தள்ளுகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

“அரசாங்கத்தை ஏதேனும் ஒன்றைச் செய்ய வைப்பது அல்லது செய்வதிலிருந்து தடுத்து நிறுத்துவது கூட இச்சட்டத்தின்க கீழ் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம். இத்தகைய குற்றத்தைச் செய்யும் ஒருவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 15 மில்லியன் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.”

“ஒரு பேரணியில் நிகழ்த்தப்படும் உரை பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டால், அந்த உரையானது பயங்கரவாதச் செயல் எனத் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அப்பேரணியில் கலந்துகொள்ளுமாறு மக்களை அழைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் ஒருவர் கூட தண்டிக்கப்படலாம்.”

“பேரணிகள் மற்றும் போராட்டங்கள் போன்ற நிகழ்வுகளைத் தடை செய்யவும், பின்னர் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நீதிமன்றத்திற்கு அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசாங்கத்திற்கு இச்சட்டமூலம் அதிகாரமளிக்கிறது.”

“முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், பாதுகாப்புச் செயலாளருக்கு எந்தவொரு நபரும் குறிப்பிட்ட எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழைவதைத் தடைசெய்யும் அதிகாரம் வழங்கப்படும். அதற்கேற்ப, பாதுகாப்புச் செயலாளர் தனது விருப்பம்போல தீர்மானங்களை எடுக்க முடியும்.”

“பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் எவரையும் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் (IGP) அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைக் கோரலாம். அத்தகைய நபர் விசாரணையின்றி இரண்டு மாதங்கள் வரை தடித்து வைக்கப்படலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்
protest11
தையிட்டி பௌத்த விகாரை லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் புலம்பெயர் அமைப்புகள் போராட்டம்
namal courts
பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் - நீதிமன்றத்தில் அலி சப்ரி
gajendran
நாடு திரும்புவோருக்கு இதுவா பாதுகாப்பு?கிருஸ்ணகுமாரை உடனடியாக விடுதலை செய்து அவரை உடனடியாக குடும்பத்தினருடன் இணைக்கவேண்டும்- கஜேந்திரன் 
rajeevkanth
இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!--ரஜீவ்காந்
ravikaran11
கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்:' தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ரவிகரன் எம்.பி. கோரிக்கை!
amnesty
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தை முற்றிலும் திரும்பப் பெறுங்கள்’: சர்வதேச மன்னிப்புச் சபை கடும் கண்டனம்
basil
மாத்தறை பிரவுண்ஹில் காணி வழக்கு – பசிலுக்கு பிடியாணை
BASL-asks-govt
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்