நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான 70 மில்லியன் ரூபா ‘கிரிஷ்’ (Krrish) நிதி மோசடி வழக்கில், வெளிநாட்டில் உள்ள இரு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் கிடைக்கப்பெற்றனவா என்பதை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணையின்போது ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, இவ்வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது அரசுத் தரப்பு சாட்சிகள் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர்களுக்கான அழைப்பாணைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். எனினும், அவை உரிய முறையில் அவர்களிடம் கையளிக்கப்பட்டனவா என்பது குறித்த உறுதிப்படுத்தல் இதுவரை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, குறித்த இரு சாட்சிகளுக்கும் அழைப்பாணைகள் கிடைத்தனவா என்பதை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்தால், அவரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.