பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை செம்மஞ்சள் நிற ஆடையணிந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த விடயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செம்மஞ்சள் ஆடைகளில் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டனர்.
செம்மஞ்சள் நிறமானது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளற்ற பிரகாசமான எதிர்காலத்தை குறிப்பதுடன் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றார். இது பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் களைவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றது