2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை செய்துகொண்டதையடுத்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகச் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுடன் தொடர்புடையதாக, கடந்த 2026 ஜூன் 3 ஆம் திகதி அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணைகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னைய நீதிமன்ற அமர்வுகளின் போது நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார். (அச்சமயம் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை).
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜராகியிருந்த வேளையில், அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சட்ட நடவடிக்கையாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் 2027 மார்ச் 5 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று திகதி குறித்துள்ளது