இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்

 

உலகளாவிய ரீதியில் எயார்பஸ் (Airbus) நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்த முன்னணி பிரான்ஸ் தடயவியல் நிபுணர் ஒருவர்,   பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கில் முக்கிய சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

‘ஃபாரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்’ (Forensic Risk Alliance – FRA) நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத் தலைவரான யூஸ்ர் காலி (Yousr Khali), எயார்பஸ் நிறுவனம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டு ஊழல் மற்றும் இணக்கத்தன்மை விசாரணையில் முக்கிய பங்காற்றியவராவார். எயார்பஸ் நிறுவனத்தின் உப தலைவர் கார்ல் ஹென்னெசியுடன் (Karl Hennessee) இணைந்து, அவரும் இவ் வழக்கில் நிபுணத்துவச் சாட்சியாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.

எயார்பஸ் நிறுவனம் மற்றும் அதன் உலகளாவிய விமான விற்பனைகள் குறித்து நான்கு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட தடயவியல் விசாரணைக்குத் தலைமை தாங்கிய காலி, இலஞ்ச ஊழல் வலையமைப்பொன்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இவ் விசாரணையில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணத்திற்குப் பேரம் பேசியமையை இவ் விசாரணையே கண்டறிந்தது.

குற்றப்பத்திரிகையின்படி, நாமல் ராஜபக்ஷவும் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவும், குறித்த விமானங்களை வேறொரு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு (leasing) விடுவது தொடர்பில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த 10 விமானங்களையும் கொள்வனவு செய்து, அவற்றை விமானக் குத்தகை நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்த பின்னர், மீண்டும் அந்நிறுவனத்திடமிருந்து குத்தகைக்குப் பெறுவதே இத் திட்டமாக இருந்தது.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ஷ மீது தனியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக சீனா, மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மற்றும் கானா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் வழங்கத் தாம் இணங்கியதாக எயார்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்ட சற்று நேரத்திலேயே, குறித்த இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் 2020 பெப்ரவரியில் சந்திரசேன கைது செய்யப்பட்டார்.

தமக்கு எதிரான வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான இணக்கப்பாடுகளின் கீழ் எயார்பஸ் நிறுவனம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தியது. அத்துடன், இவ் ஊழலில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அந்நிறுவனம் இணங்கியிருந்தது.

சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, இவ் வழக்கில் சமர்ப்பிக்கப்படவுள்ள 59 சாட்சிகளின் முழுமையான பட்டியலும், 87 தொகுதி ஆவணங்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட 18 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இலஞ்சப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவண ரீதியான ஆதாரங்கள் (paper trail) உள்ளமையை நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன. பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கைகளின் கீழ் அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் இவ் நிதிப் பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ மீது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பணச் சலவைத் தடுப்பு (திருத்தச்) சட்டம் மற்றும் 1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலஞ்சச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கபில சந்திரசேனவின் விதவை மனைவியான பிரியங்கா நியோமலி விஜேநாயக்கவிற்குச் சொந்தமானதாகக் கூறப்படும், புரூணையில் பதிவு செய்யப்பட்ட ‘பிஸ் சொலியூஷன்ஸ்’ (Biz Solutions) எனும் போலி நிறுவனம் (shell company) இவ் வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளது. அவரும் நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த அதே நாளான 2026 மே 8 ஆம் திகதி, கொழும்பிலுள்ள உறவினர் ஒருவரின் இல்லத்தில் சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 60 மில்லியன் ரூபாவை (அக்காலப்பகுதியில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்கள்) வழங்கியதாக அவர் முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் (CIABOC) தெரிவித்திருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி அக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்