இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போதுபோது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரிவான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விடுத்துள்ளது.
“நான் பலமுறை இறந்துவிட்டேன்: இலங்கையில் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு” (“I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On”) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய 40 பக்க அறிக்கையில், மோதலின் போது இடம்பெற்ற சர்வதேசச் சட்டத்தின் பாரதூரமான மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பெருமளவில் இல்லாமலேயே தொடர்வதாக OHCHR தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2006 முதல் 2009 மே வரையிலான காலகட்டத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்லாமல், தொடர்ச்சியான ஒரு போக்கின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தன என அவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.
இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்களை நம்பகத்தன்மையுடன் விசாரிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
நான்கு முக்கியச் சம்பவங்களை அவ்வறிக்கை ஆராய்ந்துள்ளது:
-
2006 ஜனவரியில் தமிழ் புனர்வாழ்வுக் கழக (TRO) ஊழியர்கள் காணாமல் போனமை.
-
2006 ஆகஸ்டில் மூதூரில் ‘ஆக்ஷன் கொன்ட்ரே லா ஃபைம்’ (Action Contre la Faim) அமைப்பைச் சேர்ந்த 17 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை.
-
2009 ஜனவரியில் ஐ.நா. மனிதாபிமான உதவித் தொடரணி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி தடுத்தமை.
-
2009 ஆம் ஆண்டில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை.
OHCHR இன் கூற்றுப்படி, இந்த நான்கு வழக்குகளிலும் எவரும் குற்றவியல் ரீதியில் பொறுப்புக்கூறப்படவில்லை.
அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மனிதாபிமான நடவடிக்கைகளை பலவீனப்படுத்தி, பொதுமக்களின் துயரங்களை அதிகரித்ததாகவும் அவ்வறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுமக்களைப் போதுமான அளவு பாதுகாக்கத் தவறியது மற்றும் ஆரம்பகட்ட எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியது உள்ளிட்ட மோதலின் போது தமக்கு ஏற்பட்ட நிறுவன ரீதியான தோல்விகளையும் ஐ.நா. ஏற்றுக்கொண்டுள்ளது.

முக்கியப் பரிந்துரைகள்
இலங்கை பின்வருவனவற்றைச் செய்யுமாறு OHCHR அழைப்பு விடுத்துள்ளது:
-
பகிரங்க மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடுகளை வழங்குதல்.
-
சுயாதீனமான வழக்குத் தொடரும் பொறிமுறையொன்றை நிறுவுதல்.
-
மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பரந்த கொள்கை அல்லது திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தனவா என்பது குறித்து விசாரித்தல்.
-
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்நாட்டுச் சட்டத்தில் இணைத்தல்.
-
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சாசனத்தில் (Rome Statute) இணைதல்.
-
பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்தி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
-
பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கண்காணிப்பதையும் முடிவுக்குக் கொண்டு வருதல்.
உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் முயற்சிகள் போதுமானதாக இல்லாத நிலையில், சர்வதேச விசாரணைகள், வழக்குத் தொடரல்கள், இலக்கு வைக்கப்பட்ட தடைகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான மனித உரிமைப் பரிசோதனைகள் (human rights vetting) ஆகியவற்றையும் அவ்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
2026 செப்டம்பர் 24 அன்று இலங்கை அரசாங்கத்திடம் 27 கேள்விகளைச் சமர்ப்பித்ததாகவும், பின்னர் கருத்துகளைக் கோரும் வகையில் நவம்பர் 3 அன்று அறிக்கையின் முன்கூட்டிய பிரதியைப் பகிர்ந்ததாகவும் OHCHR தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அது குறிப்பிட்டுள்ளது.