எதிர்காலத்தில் பொலித்தீன் பயன்பாட்டிற்கு வரிவிதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சூழல் விவகார பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொலித்தீன் பயன்பாட்டிற்கு வரி விதிப்பதை ஒரு முடிவாக கருதாமல் ஆரம்பபுள்ளியாக கருதவேண்டும்,வரி விதித்தால் வர்த்தகர்கள் நிச்சயமாக அதற்கான கட்டணத்தை அறவிடவேண்டிய நிலையேற்படும்,என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் பேரழிவாக மாறியுள்ள பொலித்தீனை இல்லாமல் செய்வது அல்லது குறைப்பதே எங்கள் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
சிறியளவு ரூபாயினை அறவிடுவதன் மூலம் மாத்திரம் பொலித்தீன் பாவனையை முற்றாக நிறுத்தவிடமுடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் எனினும் இது நுகர்வோரை சிந்திக்க தூண்டும் கவனமாகயிருக்க தூண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் பொருட்களை வாங்கும்போது ஐந்து ஆறுவகை பொருட்களை வாங்கினால் ஐந்து ஆறு பொலித்தீன் பைகளை பெறுகின்றோம் என தெரிவித்துள்ள அமைச்சர் தற்போது நாங்கள் கொண்டுவந்துள்ள நடைமுறைகாரணமாக இது இரண்டு மூன்றுபைகளிற்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளிற்கு கட்டணம் அறவிடவேண்டும் என்ற உத்தரவு குறித்து சில வர்த்தகர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே பிரதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
