தொழிலதிபர்கள், பேக்கரி உரிமையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வீட்டு நுகர்வோர் உள்ளிட்ட மின்சாரப் பயனாளர்கள், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக் கூடும் என்பது குறித்துத் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56% உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சார சபை (CEB) கடந்த திங்கட்கிழமை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனையின்படி, செலவுக்கு ஏற்ற கட்டண முறையைப் பேண வேண்டியுள்ளதால், அரசாங்கம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்கள்:
-
0–30 அலகுகள்: ஒரு அலகிற்கான கட்டணம் ரூ. 4.50 இலிருந்து ரூ. 5.11 ஆக உயரும்.
-
31–60 அலகுகள்: ரூ. 8 இலிருந்து ரூ. 9.08 ஆக உயரும்.
-
61–90 அலகுகள்: ரூ. 18.50 இலிருந்து ரூ. 21.01 ஆக உயரும்.
-
91–120 அலகுகள்: ரூ. 24 இலிருந்து ரூ. 27.25 ஆக உயரும்.
-
121–180 அலகுகள்: ரூ. 41 இலிருந்து ரூ. 46.56 ஆக உயரும்.
-
181 அலகுகளுக்கு மேல்: ஒரு அலகிற்கான கட்டணம் ரூ. 61 இலிருந்து ரூ. 69.27 ஆக உயரும்.
வர்த்தகர்கள் மற்றும் வீட்டு நுகர்வோர் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகின்றனர். மின்சாரத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள், தமது சேவைக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.
சிறிய அளவிலான வாகன திருத்தகம் (Garage) நடத்தும் 35 வயதான ஏட்ரியன் அடிகாரம் கூறுகையில், வாகனங்களை உயர்த்தும் இயந்திரங்கள் மற்றும் அமுக்கிகளை (Compressor) இயக்க மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும், செலவுகளைச் சமாளிக்க வாகனத் திருத்தக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

பெரிய அளவிலான பேக்கரி உரிமையாளர்களும் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். இயந்திரங்கள் மற்றும் அடுப்புகளுக்கு (Ovens) அதிக மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால், பாண் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஊழியர்கள் அதிக சம்பளம் கோருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணியின் தலைவி டானியா அபேசுந்தர குறிப்பிடுகையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் (SME) இந்த திடீர் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார். இது உற்பத்திச் செலவை அதிகரித்து, இறுதியில் நுகர்வோர் மீதே சுமையாக விழும் என அவர் எச்சரித்தார்.
ஆடைத் தொழிற்றுறை மற்றும் கைத்தறித் துறையினரும் இம்மாற்றத்தால் உலக சந்தையில் தமது போட்டியிடும் திறன் குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.
மின்சாரப் பயனாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக கூறுகையில், முறையான மதிப்பீடுகள் அல்லது லாப விபரங்களை வழங்காமல் மின்சார சபை இந்த உயர்வை கோருவதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், ஊழியர்களின் தன்னார்வ ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கான செலவை நுகர்வோர் மீது சுமத்த மின்சார சபை முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) கார்ப்பரேட் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கூறுகையில், இந்த முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாகவும், அடுத்த வாரம் இது குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் காலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.