முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே, பிரெஞ்சு பயண ஆவணம் உட்படப் பல கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தமது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வழிநடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சலே, தனது உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தொடர்ந்து கூறி வந்தார்.

எவ்வாறாயினும், அவர் வேறு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமையைப் பெற்றதற்கான பதிவுகள் எதுவும் இல்லாத நிலையிலும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது பயண ஆவணங்கள் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சலே பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பிரெஞ்சு கடவுச்சீட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச சட்டவாதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுரேஸ் சாலே 2018 ஆம் ஆண்டு மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தனது இரண்டு வருட சேவைக் காலத்தை நிறைவு செய்திருந்தார். அதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு வரை, பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முதலாம் செயலாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியதுடன், ஐரோப்பாவிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை லண்டனுக்கு இரகசியமாக அழைத்துச் சென்றமையிலும் சுரேஸ் சாலேவுக்குத் தொடர்பிருந்ததாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்டு 279 பேர் கொல்லப்பட்டதோடு 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சுரேஸ் சாலேலே என அரச சட்டவாதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், சுரேஸ் சாலே இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போதிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலைக்கு விசாரணைகள் நெருங்கியுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, தனது ஆப்பிள் ஐபோனின் (Apple iPhone) கடவுச்சொற்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு சலே ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையிலும், தற்கொலைக் குண்டுதாரிகளை இலங்கையில் சந்தித்ததாகச் சாட்சிகள் கூறும் காலப்பகுதியிலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி தாம் வெளிநாட்டில் இருந்ததாக சுரேஸ் சாலே வாதிட்டு வருவதால், அவர் பல கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விடயம் இவ்வழக்கில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தாம் பயன்படுத்திய கடவுச்சீட்டுகளை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாக சுரேஸ் சாலே கூறியிருந்த போதிலும், அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை (Writ) மனுவொன்றில், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேறு பல கடவுச்சீட்டுகளின் நிழற்படப் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன. தமக்கு முன்னர் தெரிந்திராத இக்கடவுச்சீட்டுகள் குறித்து தற்போது விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமக்கு எதிராகப் பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளவர்களில் ஒருவரும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான அசாத் மௌலானாவுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என சுரேஸ் சாலே புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், 2020 ஓகஸ்ட் மாதம் அஹுங்கல்லவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அசாத் மௌலானா தங்கியிருந்த அதேவேளையில், சுரேஷ் சுரேஸ் சாலே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தமை குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் கவனம் செலுத்தப்படும் நபர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் அசாத் மௌலானா இருக்கும் புகைப்படமொன்றும் முன்னைய விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?