23 பிப்ரவரி 2026


ட்ரிப்அட்வைசர் தளம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான ‘டிராவலர்ஸ் சாய்ஸ் சிறந்தவற்றில் சிறந்த கடற்கரைகள்’ (Travelers’ Choice Awards Best of the Best Beaches) பட்டியலில் இலங்கையின் மிரிஸ்ஸ (Mirissa) மற்றும் பெந்தோட்டை (Bentota) ஆகிய இரண்டு கடற்கரைகள் ஆசியாவின் முன்னனி கடற்கரைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மதிப்புமிக்க பட்டியலில் மிரிஸ்ஸ கடற்கரை 5-வது இடத்தையும், பெந்தோட்டை கடற்கரை 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ட்ரிப்அட்வைசர் தளத்தின்படி, ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ (Best of the Best) என்ற இந்த அங்கீகாரம் பயணத்துறையில் மிக உயர்ந்த தரத்தைக் குறிக்கிறது. 12 மாத காலப்பகுதியில் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட அதிகப்படியான சிறந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தத் தளத்தில் உள்ள 8 மில்லியனுக்கும் அதிகமான பட்டியல்களில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான இடங்களே இந்தச் சிறப்பைப் பெறுகின்றன.
மிரிஸ்ஸ கடற்கரை (Mirissa Beach): இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள மிரிஸ்ஸ, அதன் அழகிய மணற்பரப்பு மற்றும் தெளிவான நீருக்காகப் புகழ்பெற்றது.
-
இங்கு பாறை அமைப்புகளுக்கு அருகில் அமைதியான நீரில் நீந்துவதற்கும், மேற்குப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற “மிரிஸ்ஸ ரைட்” (Mirissa Right) பகுதியில் அலைச்சறுக்கு (Surfing) செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக ட்ரிப்அட்வைசர் குறிப்பிட்டுள்ளது.
-
மேலும், கடற்கரையோரம் அமைந்துள்ள கடல் உணவு உணவகங்கள் மற்றும் ‘கோகனட் ட்ரீ ஹில்’ (Coconut Tree Hill) பகுதியிலிருந்து தெரியும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் மாலை நேரத்தை உற்சாகப்படுத்துவதாக அமைகின்றன.
பெந்தோட்டை கடற்கரை (Bentota Beach): தீவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெந்தோட்டை, ஜெட் ஸ்கீயிங் (Jet skiing) மற்றும் கைட்சர்ஃபிங் (Kitesurfing) போன்ற நீர் விளையாட்டுக்களுக்குப் பெயர் பெற்றது. இதன் மென்மையான வெண்மணல் மற்றும் அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகள், நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் சூரிய குளியல் (Sunbathing) எடுப்பதற்கும் ஏற்றது என்று ட்ரிப்அட்வைசர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஆசியாவின் முதலிடத்தில் தாய்லாந்தின் புக்கெட்டில் உள்ள பனானா கடற்கரை (Banana Beach) உள்ளது.
ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகள் – 2026:
-
பனானா கடற்கரை – புக்கெட், தாய்லாந்து
-
கெலிங்கிங் கடற்கரை – நுசா பெனிடா, இந்தோனேசியா
-
ராதாநகர் கடற்கரை – ஹாவ்லாக் தீவு, இந்தியா
-
பாலோலெம் கடற்கரை – கனகோனா, இந்தியா
-
மிரிஸ்ஸ கடற்கரை – மிரிஸ்ஸ, இலங்கை
-
வைட் பீச் – பனே தீவு, பிலிப்பைன்ஸ்
-
பெந்தோட்டை கடற்கரை – பெந்தோட்டை, இலங்கை
-
ரெய்லி கடற்கரை – கிராபி, தாய்லாந்து
-
நுசா துவா கடற்கரை – பாலி, இந்தோனேசியா
-
செனாங் கடற்கரை – லங்காவி, மலேசியா