ஈராக்கின் துறைமுக நகரான பாஸ்ரா (Basra) அருகே அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதில் இந்திய மாலுமி ஒருவர் கொல்லப்பட்டதாக பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த ‘சேப்சீ விஷ்ணு’ (Safe sea Vishnu) என்ற அந்த கப்பல், புதன்கிழமை பாஸ்ரா அருகே பணியில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாக தூதரகம் குறிப்பிட்டது. எஞ்சிய 15 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கின் பொதுத் துறைமுக நிறுவனத்தைச் சேர்ந்த ஃபர்ஹான் அல்-ஃபர்தூசி, ஈராக் அரசு தொலைக்காட்சியிடம் கூறுகையில், மொத்தம் 38 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும், “காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது” என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈராக் அருகே இரண்டாவது எண்ணெய் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானதாக ஏஃப்பி (AFP) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக் அரசு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனம் (SOMO) வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. எனினும், இந்தத் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை. இது ட்ரோன் தாக்குதலா அல்லது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகள் மூலம் நடத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பாஸ்ரா எண்ணெய் முனையத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மால்டா நாட்டின் கொடியுடன் வந்த ‘ஜெஃபிரோஸ்’ (Zefyros) என்ற எண்ணெய் கப்பல், கோர் அல்-சுபைர் (Khor Al-Zoubair) துறைமுகத்திற்குள் நுழையத் தயாராக இருந்தபோது தாக்கப்பட்டதாக SOMO தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட இரண்டு கப்பல்களிலும் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.