(Paul Adams) BBC
பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில், ஈரானிய கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஒரு சிறிய நிலப்பரப்பாக இருந்தாலும் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முனையமாகும். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியை இதுவே கையாள்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக அங்கு எண்ணெய் டாங்க் கப்பல்கள் சரக்குகளை ஏற்றுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான அதிரடி பாணியில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அத்தீவில் உள்ள அனைத்து ராணுவ இலக்குகளையும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதைத் தடுக்க முயன்றால், இந்த முடிவு மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்கப் படைகள் எப்போதாவது ஒரு கட்டத்தில் கார்க் தீவை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர (கைப்பற்ற) முயற்சிக்குமா என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு செய்வது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதுடன், ஈரானின் பிரதான நிலப்பரப்பிற்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு பயனுள்ள தளமாகவும் அமையும்.
குறைந்தது இரண்டாயிரம் கடற்படை வீரர்களை (Marines) ஏற்றிச் செல்லும் போர் கப்பல்கள் இப்போது வளைகுடா பகுதிக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது இந்த ஊகங்களை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் (Pentagon) மறுத்துவிட்டது. ஆனால், இந்த புதிய படை நகர்வுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அது இராணுவத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளை (தாக்குதல் விருப்பங்களை) வழங்கும் என்பதில் சந்தேகமில்லை
