அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஈரானுடன் நிலவும் போர் “அடுத்த சில வாரங்களுக்குள்” முடிவுக்கு வரும் என்றும், அதன் பிறகு எண்ணெய் விநியோகம் சீராகி எரிசக்தி செலவுகள் குறையும் என்றும் அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஏபிசி (ABC) தொலைக்காட்சியின் ‘திஸ் வீக்’ (This Week) நிகழ்ச்சியில் பேசிய ரைட், “இந்த மோதல் நிச்சயமாக அடுத்த சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன் – ஒருவேளை அதைவிட முன்னதாகவும் நடக்கலாம். போர் முடிந்த பிறகு, எண்ணெய் விநியோகத்தில் முன்னேற்றத்தையும் விலையில் சரிவையும் நாம் காண்போம்,” என்று கூறினார். சந்தைகளை அமைதிப்படுத்தவும் அமெரிக்க வாக்காளர்களை திருப்திப்படுத்தவும் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்தச் செய்திக்கு முரணாக டொனால்ட் ட்ரம்ப் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைச் செய்யத் தாம் இன்னும் தயாராக இல்லை என்று அவர் கூறினார். ஈரான் போர்நிறுத்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருப்பதாகத் தாம் கருதுவதாகவும், ஆனால் சிறந்த விதிமுறைகளைப் பெறுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து போரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமையன்று என்.பி.சி (NBC) செய்தியிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதித் தளமான கார்க் தீவில் (Kharg Island) உள்ள இலக்குகளை அமெரிக்கா மீண்டும் ஒருமுறை “வெறும் வேடிக்கைக்காக” (just for fun) குண்டுவீசித் தாக்கக்கூடும் என்று கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள இராணுவ நிலைகளை அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, ஆனால் விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் எனக்கு அதில் விருப்பமில்லை,” என்று கூறிய ட்ரம்ப், எண்ணெய் விநியோகப் பாதையைச் சீர்செய்வதற்காக ஹார்முஸ் நீரிணைக்கு வடக்கே உள்ள ஈரானியக் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.