ஈரான் மீது அமெரிக்கா தனது முதல் குண்டை வீசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட இரண்டு ராணுவ விமானங்களை இலங்கையில் தரையிறக்கி நிறுத்தி வைக்க அமெரிக்கா அனுமதி கோரியதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான போரைத் தொடங்கியபோது, இலங்கை இந்த கோரிக்கையைப் பரிசீலித்து வந்தது. இறுதியில், மத்திய கிழக்கு மோதலில் தனது நடுநிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் அந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததாகப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நியுயோர்க் டைம்ஸிற்கு தெரிவித்துள்ளனர்’
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இதனை உறுதிப்படுத்தினார்.
போர் தொடங்கிய பிறகு அமெரிக்கா தனது கோரிக்கையைத் தொடரவில்லை அல்லது எதற்காக அந்த அனுமதியைக் கேட்டது என்பதற்கான காரணத்தையும் விளக்கவில்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே காலகட்டத்தில், மூன்று போர்க்கப்பல்களைத் தனது கடல் எல்லைக்குள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்ற ஈரானின் தனிப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசு பரிசீலித்து வந்தது; இறுதியில் அதனையும் இலங்கை நிராகரித்தது. போர் தொடங்கிய சில நாட்களில், இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா தகர்த்தது. அந்தத் தாக்குதலில் தப்பியவர்களையும், மற்றொரு ஈரானிய போர்க்கப்பலைச் சேர்ந்த மாலுமிகளையும் தற்போது இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் பராமரித்து வருகிறது.
அமெரிக்காவின் கோரிக்கையும், அதனை ஏற்க இலங்கை காட்டிய தயக்கமும், ஈரான் உடனான போருக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்க்க முயலும் பல சிறிய நாடுகள் எதிர்கொள்ளும் ராஜதந்திர சமநிலைக்கான (Diplomatic balancing act) மற்றொரு உதாரணமாகும்.
கொழும்பில் உள்ள தனது தூதரகம் மூலம் இலங்கை அதிகாரிகளுக்கு இந்தச் செய்தியை அனுப்பிய அமெரிக்கா, தனது விமானங்களை நாட்டில் வைத்திருக்க விரும்புவதற்கான காரணத்தைக் கூறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“அவர்கள் விமானங்களை நிறுத்துவதற்கான வசதியை (Parking) மட்டுமே கேட்டார்கள்,” என்று அவர் கூறினார். அமெரிக்கா இந்த முடிவால் “ஆச்சரியமடைந்தது ஆனால் வருத்தப்படவில்லை” என்று பின்னர் ஒரு செய்தியில் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் நல்லுறவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு எதிர்பாராத விஜயம் மேற்கொண்ட திரு. திஸாநாயக்க, “தற்போது டிஜிபௌட்டி (Djibouti) அருகே உள்ள இரண்டு கடற்படை போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில்தரையிறக்க அமெரிக்கா அனுமதி கோரியது” என்று தெரிவித்தார்.
ஈரானின் கோரிக்கைக்குப் பின்னரே அமெரிக்காவின் கோரிக்கை வந்ததாகத் திரு. திஸாநாயக்க கூறினார். இரண்டு கோரிக்கைகளையும் தனது அரசாங்கம் ஆய்வு செய்து விபரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதிலும், “குறிப்பாக அந்த நேரத்தில் ராணுவ மோதலுக்கான அறிகுறிகள் ஏற்கனவே வெளிப்பட்டு வந்ததால்,” இலங்கையின் நடுநிலைமையைப் பேணுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.
“நாங்கள் இரு தரப்பினருக்கும் அனுமதி மறுத்துவிட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இது குறித்து உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை, மேலும் பென்டகன் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
சாதாரண சூழ்நிலைகளில், அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை அசாதாரணமான ஒன்றாக இருந்திருக்காது. இலங்கை மற்றும் அமெரிக்கா பல தசாப்தங்களாக ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன, மேலும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இலக்குகளுக்கு இந்தத் தீவு நாடு மூலோபாய ரீதியாக முக்கியமானது.
கடந்த காலங்களில் இராணுவத் தளவாடங்கள் தொடர்பான விநியோகம் பணிகளில் இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைத்துள்ளன என்று வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் கடந்த காலங்களில் போர் தொடர்பான உபகரணங்களை இறக்கவும் ஏற்றவும் பலமுறை இலங்கை விமான நிலையங்களைப் பயன்படுத்தியுள்ளன, “ஆனால் ஒரு போர் நடந்து கொண்டிருக்கும்போது அல்ல,” என்று திரு. காரியவசம் கூறினார்.
மார்ச் 4 அன்று, தெற்கு இலங்கையின் காலி (Galle) துறைமுக நகரத்திற்கு அருகில் ஈரானிய போர்க்கப்பலான ‘தேனா’வை (Dena) அமெரிக்க ராணுவம் தகர்த்தது, இதன் மூலம் இலங்கை விருப்பமின்றி இந்த மோதலுக்குள் இழுக்கப்பட்டது. தேனா கப்பலில் தப்பியவர்களை இலங்கை கடற்படை மீட்டது. மேலும் மற்றொரு ஈரானிய போர்க்கப்பலான ‘புஷெர்’ (Bushehr) இயந்திரக் கோளாறைச் சந்தித்தபோது, அந்த கப்பலைத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கவும் அதன் மாலுமிகளை நாட்டிற்குள் அனுமதிக்கவும் சர்வதேச விதிகளின்படி இலங்கை கடமைப்பட்டிருந்தது.

அமெரிக்க விமானங்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்ததும், அழிக்கப்பட்ட ‘தேனா’ கப்பலில் தப்பிய 32 பேரையும், ‘புஷெர்’ கப்பலில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மாலுமிகளையும் பராமரிக்க எடுத்த முடிவும் அமெரிக்காவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தவில்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரும் தெற்காசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதருமான செர்ஜியோ கோர் (Sergio Gor), இந்த வாரம் கொழும்பிற்கு மேற்கொண்ட குறுகிய விஜயத்தின் போது திரு. திஸாநாயக்கவைச் சந்தித்தார். அவர்கள் வர்த்தகம் மற்றும் நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்காவே மிகப்பெரிய சந்தையாக உள்ளது, மேலும் கடந்த ஆண்டில் அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் இத்துறை சவால்களை எதிர்கொண்டு வருகிறது.