ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குண்டுவீசித் தகர்க்கப் போவதாக மிரட்டிய சில நேரங்களிலேயே, தெஹ்ரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர் அவர் தாக்குதல்களை ஒத்திவைப்பதாக அறிவித்தார், இது பங்குச் சந்தை உயரவும் எண்ணெய் விலை குறையவும் வழிவகுத்தது. ஆனால், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரானிய அரசு ஊடகங்கள் டிரம்பின் கூற்றை நிராகரித்துள்ளன.
டிரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் இராணுவ முன்னேற்றங்கள்:
ஈரான் தரப்பிலிருந்து:
-
தாக்குதல் திட்டங்கள்: டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா – இஸ்ரேலின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக ஈரானின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கடற்படை கட்டுப்பாடு: பாரசீக வளைகுடா பிராந்தியம், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் கடல் பகுதி ஆகியவை ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாக அந்நாட்டு இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் கண்ணிவெடிகளை (Mines) வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

-
இழப்பீடு கோரிக்கை: அதிஉயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெஸாயி கூறுகையில், ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கும் வரை போர் தொடரும் என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் தரப்பிலிருந்து:
-
நெதன்யாகுவின் நிலைப்பாடு: இஸ்ரேலின் முக்கிய இராணுவ வெற்றிகளை ஒரு ஒப்பந்தமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் நம்புவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இருப்பினும், ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
-
இராணுவ இடமாற்றம்: லெபனான் எல்லையில் இருந்த ஒரு போர் பட்டாலியனை (Combat battalion), ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நோக்கி இஸ்ரேல் திசைதிருப்பியுள்ளது. அங்கு பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
-
தலைமையகம் மீது தாக்குதல்: தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) முக்கிய தலைமையகம் மற்றும் பல இராணுவக் கட்டிடங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திரம் மற்றும் இதர நிகழ்வுகள்:
-
ஓமானில் எச்சரிக்கை: ஓமானின் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அங்கு நிலவும் “தற்போதைய நடவடிக்கைகள்” காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் (Shelter in place) இருக்குமாறு எச்சரித்துள்ளது.
-
அமெரிக்கப் போர்க்கப்பல்: ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த USS Gerald R. Ford விமானம் தாங்கிப் போர்க்கப்பலின் சலவை அறையில் (Laundry area) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அது பராமரிப்புப் பணிகளுக்காக கிரீஸ் (Greece) சென்றடைந்தது.
-
மத்தியஸ்த முயற்சிகள்: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தனது நாட்டில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சரும் கடந்த 48 மணிநேரத்தில் பல உலகத் தலைவர்களுடன் இது குறித்துப் பேசியுள்ளார்.