நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகளை சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:
அரசியலமைப்பு மீறல்: குமார ஜயகொடி அரசியலமைப்பின் 28வது உறுப்புரைக்கு அமைவாக தனது அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் தனது பொறுப்புகளை மீறியுள்ளதாக அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
நிலக்கரி கொள்வனவு முறைகேடு: நுரைச்சோலை (லக்விஜய) மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியை போதுமான அளவில் கொள்வனவு செய்யத் தவறியதுடன், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடுமையான அலட்சியத்தைக் காட்டியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிர்வாகத் தவறு: நவம்பர் 25ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட நிறுவன மேலாண்மைப் பொறுப்புகள் மற்றும் தொழில்நுட்ப இழப்புகளைக் குறைக்கும் பணிகளைச் சரிவரச் செய்யத் தவறியமையும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள்: லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும், நல்லாட்சி கொள்கைகளைத் தீவிரமாக மீறுவதாகவும் அமைந்திருப்பதால், அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.