ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) கொழும்பு மற்றும் மெல்போர்ன் (Melbourne) இடையிலான தனது விமானச் சேவைகளை விரிவாக்கவுள்ளது. இதன்படி, வரும் 2026 ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தற்போதைய வாராந்தர விமானங்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து பத்தாக அதிகரிக்கப்படும்.
இந்த மேம்படுத்தப்பட்ட புதிய கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மூன்று சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். இது பயணிகளுக்கு கூடுதல் பயணத் தெரிவுகளை வழங்குவதுடன், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விமான இணைப்பையும் மேம்படுத்தும்.
இந்த விமானச் சேவை அதிகரிப்பானது, சுற்றுலா மற்றும் வணிகப் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்தும்.