ஷீடிரேட்ஸ் ஸ்ரீலங்கா’ (SheTrades Sri Lanka Hub) அமைப்பை நடாத்தும் முதன்மை நிறுவனமான இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்
EDB), சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்து, துறை சார்ந்த இரண்டு ஏற்றுமதி வழிகாட்டி கையேடுகளை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டுள்ளது. இலங்கையின் பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உத்தியோகத்தர்களின் (SMEs) ஏற்றுமதித் தயார்நிலையை வலுப்படுத்தி, பிரித்தானிய (UK) சந்தையை அவர்கள் எளிதாக அணுகுவதே இக்கையேடுகளின் நோக்கமாகும்.

ஆடைத் துறை (பெண்களுக்கான ஆபரணங்கள், பாதணிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உட்பட) மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாய உணவு மற்றும் நறுமணப் பொருட்கள் (Processed Agrifood and Spices) ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு இக்கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 92% உற்பத்திப் பொருட்களுக்கு வரிவிலக்குடன் கூடிய சந்தை வாய்ப்பை (Duty-free access) வழங்கும் பிரித்தானியாவின் ‘வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம்’ (Developing Countries Trading Scheme – DCTS) மற்றும் பிற வர்த்தக நன்மைகள் குறித்த வழிகாட்டுதல்களை இந்த ஆதாரங்கள் வழங்குகின்றன.
பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயல்படும் ‘ஷீடிரேட்ஸ் காமன்வெல்த்+’ (SheTrades Commonwealth+) திட்டத்தின் கீழ் இந்த முன்முயற்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் காமன்வெல்த் நாடுகளிலுள்ள பெண் தொழில்முனைவோர் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் ஏற்றுமதி சார்ந்த வணிகங்களின் போட்டித்திறன், திறன் மற்றும் சர்வதேச சந்தை அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த வெளியீட்டு விழாவில் இலங்கைக்கான பிரித்தானியாவின் வர்த்தகத் தூதுவர் லார்ட் ஹேனெட் (Lord Hannett of Everton), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (H.E. Andrew Patrick) மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோருடன் EDB பிரதிநிதிகள் மற்றும் பல தொழில்முனைவோரும் கலந்து கொண்டனர். இதன்போது, ஏற்றுமதி சார்ந்த பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல், சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுதல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைப் பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் பிரித்தானிய அரசாங்கம், ITC மற்றும் EDB ஆகியவற்றிற்கு இடையே தொடரும் இந்த கூட்டு முயற்சியை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க வரவேற்றார். இலங்கைக்கான மிக முக்கிய வர்த்தகப் பங்காளியாக பிரித்தானியா தொடர்ந்து விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரித்தானியாவின் ‘வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின்’ கீழ் உள்ள நல்வாய்ப்புகளை எடுத்துரைத்தார். சர்வதேச சந்தைகளில் அதிகப் பங்களிப்பை வழங்குவதற்காக, உள்நாட்டு நிறுவனங்களின் போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் ஏற்றுமதித் தயார்நிலையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் கூறுகையில்:
“இந்த திட்டத்தின் மூலம் பயனடையவுள்ள பெண் தொழில்முனைவோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்கிய பிரித்தானிய அரசிற்கும் ‘ஷீடிரேட்ஸ்’ முன்முயற்சிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரித்தானியாவின் வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டமானது, சலுகை அடிப்படையிலான அணுகுமுறைகளின் கீழ் இலங்கை நிறுவனங்கள் பிரித்தானிய சந்தைக்குள் நுழைவதற்கும் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகும்.” என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய லார்ட் ஹேனெட், தொழில்முனைவோர் சர்வதேச சந்தை வாய்ப்புகளிலிருந்து தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்வதில் வர்த்தக ஆதரவு முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த ஏற்றுமதி கையேடுகளை உள்நாட்டு மொழிகளில் (சிங்களம் மற்றும் தமிழ்) மொழிபெயர்ப்பதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கு மதிப்புமிக்க சந்தைத் தகவல்கள் எளிதில் சென்றடையும் என்றும், இதன் மூலம் பரந்த அளவிலான வணிகங்கள் ஏற்றுமதித் தேவைகள் மற்றும் பிரித்தானிய சந்தையிலுள்ள நல்வாய்ப்புகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பூஜ்ஜிய-வரி (Zero-tariff) அணுகல் மூலம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் பிரித்தானிய சந்தையில் வளர்ச்சிப் பலன்களைப் பெறுவதற்கான பரந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடுகள், பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரித்தானிய ஏற்றுமதிச் சந்தையின் நடைமுறைகள், ஒழுங்குமுறை இணக்கங்கள் (Regulatory compliance) மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளைக் கையாள்வதற்கான நடைமுறை வழிகாட்டிகளாகச் செயல்படுகின்றன. இந்தத் தகவல்களைச் சிங்களம் மற்றும் தமிழில் வழங்குவது, இலங்கை முழுவதும் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில்முனைவோர் மத்தியில் சிறந்த அணுகலையும் பரந்த விழிப்புணர்வையும் உறுதி செய்கிறது.
இந்தக் கையேடுகளை EDB இன் ‘SheTrades Publications and Resources’ இணையத்தளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்வானது EDB, ITC, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு இடையே ‘SheTrades Sri Lanka Hub’ கட்டமைப்பின் கீழ் தொடரும் வலுவான கூட்டாண்மையைப் பிரதிபலிக்கிறது. அத்துடன் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும், சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதிகளை வலுப்படுத்துவதிலும், இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது