“புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை விட, தற்போதுள்ள சொத்துக்களின் மதிப்பை அதிகரியுங்கள்”
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (பெர்க்லி – குளோபல்) விமானப் போக்குவரத்து மேலாண்மைக்கான கௌரவப் பேராசிரியர் பட்டத்தைப் சமீபத்தில் பெற்றவரும், உலகளவில் இதைப் பெற்ற ஐந்து நபர்களில் ஒருவராகவும் ஆசியாவின் முதல் நபராகவும் விளங்கும் ஹெட்டியாராச்சிஃகே பிரான்சிஸ் அதிஷ்ட சோனல் பெர்னாண்டோ, அதிக செலவு பிடிக்கும் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை விட, இலங்கை விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பம், விமான நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட விமானப் போக்குவரத்து நிபுணருமான பேராசிரியர் பெர்னாண்டோ, ‘சண்டே ஐலண்ட்’ இதழுக்கு அளித்த செவ்வியில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான மூலோபாய அணுகுமுறையை விவரித்தார்.
பேராசிரியர் பெர்னாண்டோவின் கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறை விரைவாக மீட்சியடைந்தது; ஏனெனில் பயணியர் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்காமல், சிறப்பு விமானப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணமாகும். தமது பதவிக்காலத்தில் பேசப்பட்ட முக்கிய முன்மொழிவுகளில் ஒன்று, மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி சரக்கு மையத்தை (air cargo hub) அமைப்பதாகும். இது அந்த வசதியை ஒரு பிராந்திய தளவாடங்கள் மையமாக (regional logistics centre) மாற்றும் திறனைக் கொண்டிருந்தது என்று அவர் கூறினார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் சர்வதேச விமானப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்களும் மற்றொரு முயற்சியாகும்.

தற்போதைய பரந்த அளவிலான விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் குறித்து பேராசிரியர் பெர்னாண்டோ தனது தயக்கத்தை வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தற்போதுள்ள விமான நிலைய உள்கட்டமைப்புகளே போதுமானது என்று அவர் வாதாடினார். “தற்போதைய போக்குகளின் அடிப்படையில், நமது விமான நிலைய திறன் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது. கூடுதல் உள்கட்டமைப்புகளுக்குப் பில்லியன் கணக்கில் செலவழிப்பதற்கு முன், விமான நிறுவனத் துறையையே மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
உலகளாவிய விமானப் போக்குவரத்து வெற்றிப் கதைகளை ஒப்பிட்டுக் காட்டிய அவர், பெரிய விமான நிலைய விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கு முன், ஒரு வலுவான தேசிய விமான நிறுவனத்தை உருவாக்கும் கட்டாரின் மூலோபாயத்தைச் சுட்டிக்காட்டினார். “கூடுதல் உள்கட்டமைப்புகளுக்குப் பதிலாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப் பலப்படுத்துவதிலும், சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை அதிகரிப்பதிலும் வளங்களை முதலீடு செய்வது சிறந்தது” என்று அவர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் அதிகரித்து வரும் “இராணுவமயமாக்கல்” (militarisation) நிலையையும் பேராசிரியர் பெர்னாண்டோ விமர்சித்தார். விமான நிலையங்கள் பயணிகளுக்கு வரவேற்கத்தக்க மற்றும் சுமுகமான சூழலை வழங்க வேண்டும் என்று வாதாடினார். “சிவில் விமானப் போக்குவரத்து திறந்ததாகவும், மன அழுத்தமற்றதாகவும் இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு வரும் பார்வையாளர்களுக்கு முதன்முதலில் கிடைக்கும் அனுபவம் விமான நிலையமே ஆகும். அந்த அனுபவம் நாட்டின் நன்மதிப்பைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்றார். நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் மிகவும் சுமுகமான சூழலை உருவாக்குவதற்கு முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், குறிப்பாக சுற்றுலா மற்றும் விடுமுறைக்காகப் பயணம் செய்யும் பயணிகள் சந்திக்கும் அலைக்கழிக்கப்படும் சூழல் குறித்து இந்த விமானப் போக்குவரத்து நிபுணர் கவலை வெளியிட்டார். செல்லுபடியாகும் பயண ஆவணங்களைக் கொண்ட பயணிகள், அவர்களின் நோக்கங்கள் குறித்த அனுமானங்களின் அடிப்படையில் பயணிக்கத் தடை செய்யப்படக்கூடாது என்று அவர் கூறினார். “ஒரு பயணியிடம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (passport), விசா மற்றும் பயணச்சீட்டு இருந்தால், அந்த நபரைத் தடுக்கும் அதிகாரம் விமான நிறுவன ஊழியர்களுக்கும் குடிவரவுத் திணைக்களத்திற்கும் மட்டுமே உள்ளது. தோற்றம் அல்லது சமூகப் பின்னணியின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படக்கூடாது” என்று அவர் கூறினார்.
சுற்றுலாத்துறை குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் பெர்னாண்டோ, டுபாய் போன்ற இடங்கள் பின்பற்றும் மாதிரிகளை நகலெடுக்க முயலாமல், ஒரு தீவு நாடு என்ற வகையில் இலங்கை தனது சொந்த பலங்களில் வேரூன்றிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்றார். “நாம் டுபாயை அப்படியே நகலெடுக்க முடியாது. நாட்டின் உயர்தர சுற்றுலா சேவைகளை வெளிப்படுத்துவதன் மூலம், அதிக செலவு செய்யும் பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலா விளம்பரப் பிரச்சாரங்கள் அமைய வேண்டும். நமது சொகுசு விருந்தோம்பல் துறை, இரத்தினக் கற்கள், பிசினஸ்-கிளாஸ் பயணம் மற்றும் பிற மதிப்புமிக்க அனுபவங்களை நாம் சந்தைப்படுத்த வேண்டும். இதன் மூலமே பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் பயணிகளைக் கவர முடியும்” என்றார்.
எதிர்காலத்தைப் பற்றிப் பேசிய பேராசிரியர் பெர்னாண்டோ, கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதை விட மேம்பட்ட விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பங்களில் முதலீட்டு முன்னுரிமைகள் மையமாக இருக்க வேண்டும் என்றார். மிகவும் மோசமான பார்வைத் திறன் கொண்ட சூழலிலும் விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு உதவும் Category III-C (CAT III-C) தரையிறங்கும் அமைப்புகளை (landing systems) இதற்கான உதாரணமாக அவர் குறிப்பிட்டார். “மற்றொரு முனையக் கட்டடத்தைக் (terminal building) கட்டுவதை விட, இத்தகைய தொழில்நுட்பம் விமான நிலையத்தின் செயல்திறனையும் சர்வதேசப் போட்டித்தன்மையையும் மிகவும் திறம்பட மேம்படுத்தும்” என்று அவர் கூறினார்.
இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையின் நீண்டகால வெற்றி என்பது, அறிவார்ந்த தலைமைத்துவம் மற்றும் மூலோபாய திட்டமிடலிலேயே தங்கியுள்ளது என்றும் பேராசிரியர் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.