இலங்கையில் உயர்கல்வி (postsecondary education) கற்ற இளைஞர்களில் சுமார் 43 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இது கல்வித் தகுதிகளுக்கும் சந்தையிலுள்ள வேலைவாய்ப்புகளுக்கும் இடையே காணப்படும் கடுமையான இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.
உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில், சர்வதேச ஒப்பீடுகளின்படி இலங்கை மிகவும் மோசமான உச்சகட்ட நிலையில் உள்ளது. இலங்கையைத் தொடர்ந்து இந்தியா சுமார் 42 சதவீதத்துடனும், பங்களாதேஷ் தோராயமாக 36 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒப்பீட்டளவில் உலக அளவில் இதன் சராசரி 19 சதவீதமாக இருக்கும் வேளையில், சிங்கப்பூரில் இது 8 சதவீதமாகவும் ஜப்பானில் 4 சதவீதமாகவும் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
உயர்கல்வி பெற்ற பத்து இலங்கையர்களில் நால்வருக்கு மேல் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகிறார்கள் என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. கல்வி அமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் திறன்களுக்கும், முதலாளிகள் மற்றும் நிறுவனங்களால் எதிர்பார்க்கப்படும் திறன்களுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவி வரும் முரண்பாடே இதற்குக் காரணம் என சர்வதேச நாணய நிதியம் அடையாளம் கண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கித் தொழில் நுட்பங்கள் (Automation) வேலைத் தளங்களை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால், மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதுடன், தொழில்துறையினருடன் வலுவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என IMF வலியுறுத்தியுள்ளது.