பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பௌத்த மகாசங்கத்தினர் தலைமையில் கண்டி தலதா மாளிகை வளாகத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
பாதயாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் கண்டியில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் விசேட ஆசீர்வாத பூஜையும் சத்திய கிரியையும் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உலப்பன சுமங்களதேரர் ஞானசாரருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைளை கடுமையாக விமர்சித்தார்.
நாட்டையும் பௌத்தசாசனத்தையும் கடந்தகாலத்தில் வாரியபொலஸ்ரீ சுமங்கள தேரர் எவ்வாறு குரல்கொடுத்தாரோ அதேபோன்று ஞானசார தேரரும் நாட்டுக்காகவும் பௌத்தத்திற்காகவும் குரல்கொடுத்தார் என அவர் தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு தனிப்பட்ட விடயத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை,தேசத்திற்காகவும் பௌத்த சாசனத்திற்காகவும் அவர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றார், என தெரிவித்த சுமங்கள தேரர் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அவர் தனிமைப்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்வது முழு பௌத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் என தெரிவித்தார்.

அடக்குமுறைகள் நிலவுகின்ற போதிலும் பொதுமக்கள் இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்ளவேண்டும்,அநீதிக்கு எதிரான இந்த போராட்டத்தை ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும்வரை கைவிடப்போவதில்லை என அவர் தெரிவித்தார்
தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீசுமங்கள தேரரின் சிலைக்கு அருகிலிருந்து இந்த ஆரம்பமாகியுள்ளது.
பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்கள் ஞானசாரதேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி செல்லப்போவதாக தெரிவித்துள்ளதுடன் கண்டியில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டம் பல நகரங்களை கடந்து 15ம் திகதி கொழும்பை சென்றடையும் என தெரிவித்துள்ளனர்
