முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி காலை 7.30 மணியளவில் MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பாத நிலையில், அவர்களைத் தேடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஸ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த முகம்மட் ரிஸ்வான் ஆகியோரே காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில், இன்று (27) குறித்த பகுதிக்கு நேரில் சென்ற ரவிகரன், மீனவர்களின் நிலைமை தொடர்பில் கேட்டறிந்ததுடன், கடற்றொழில் அமைச்சருடனும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் ஏனைய மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போன மீனவர்களைத் தேடுவதற்குக் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளரும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்