இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிருஸ்ணகுமாருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று என்னுடன் தொலைபேசியில் உரையாடிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், கிருஷ்ணகுமாருக்கு எதிராகத் PTAயின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் (இன்னும் உறுதிப்படுத்தவில்லை) தெரிவித்தார்.
ஏற்கனவே தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளைச் சிறையிலும் தடுப்பு முகாமிலும் கழித்த ஒருவர், மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், இவ்வாறான தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
அவரது மனைவியும் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அவரைத் தடுத்து வைப்பது அவரது வாழ்க்கையையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மேலும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, கிருஷ்ணகுமாருக்கு எதிரான தடுப்பாணையை மீள்பரிசீலனை செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகுங்கள்