சபாநாயகர் ஜகத்விக்கிரமரத்தினவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தடுத்ததன் மூலம் நாடாளுமன்ற வழிமுறைகளை அரசாங்கம் மீறியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் ஆகியவற்றிற்கு இது குறித்து முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் நாளை இந்த பிரேரணை மீதான விவாதம் இடம்பெறாது என தெரிவி;த்துள்ளதை தொடர்ந்தே எதிர்கட்சி சர்வதேச அளவில் இதனை கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளதாவது
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட ஒரு பிரேரணையை திருத்துவதற்கோ அல்லது திரும்ப பெறுவதற்கோ அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்கட்சிக்கோ எந்த வித அதிகாரமும் இல்லை என்பதை ஏற்கனவே நாங்கள் எதிர்கட்சி தலைவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒரு பிரேரணையை நீக்கவேண்டுமென்றால் முதலில் அதற்குரிய முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தவர்கள் அதனை மீளப்பெறவேண்டும்,அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்,அல்லது அரசாங்கம் நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி பெரும்பான்மை வாக்குகள் மூலம் அதனை நீக்கவேண்டும்.
அரசாங்கம் இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தடுத்துவருகின்றது.அரசாங்கத்தின் விருப்பத்தின்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.