AMANTHA PERERA
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதை குழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் குறித்து, பேராசிரியர் ராஜா சோமதேவ தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையின் காரணமாக மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியான மக்கள் விவாதத்திற்கு வந்துள்ளன.
கண்டெடுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் எலும்பு எச்சங்களின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்த திட்டவட்டமான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், இந்த மரணங்களில் சில தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆலோசனையே பொது விவாதத்தைக் கிளப்பியதோடு, துரதிர்ஷ்டவசமாக இனவாத இணையவழி அச்சுறுத்தல்கள் (trolling) மற்றும் ஏச்சுப் பேச்சுகளின் புதிய அலைகளையும் உருவாக்கியுள்ளது.
இணையத்தில் நிலவும் இந்த இனவாத இரைச்சலுக்கு மத்தியில், மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய பிற நிபுணர்களைப் பற்றிய அறிக்கையிடல் இல்லாமையை நான் கவனித்தேன். மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் குறித்து குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் சில ஊடகவியலாளர்களுடன் நான் வழக்கமான தொடர்பில் இருந்து வருகிறேன். இது அறிக்கையிடக் கடினமான ஒரு செய்தி. இதுபோன்ற பணிகளுக்கு நிறுவன ரீதியிலான ஆதரவு இல்லாதபோது இது மேலும் கடினமாகிறது; இருப்பினும், இந்த நிருபர்கள் பாராட்டும் வகையில் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
“அவர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் உடல்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்றும், இதற்கு நம் நாட்டில் இல்லாத மேலதிக தடயவியல் பகுப்பாய்வு (forensics) தேவைப்படுகிறது என்றும் உத்தியோகபூர்வமற்ற முறையில் கூறினர்” என்று அவர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.
கடந்த வாரம் அவர்களில் மூவர் என்னிடம் கூறுகையில், உடல்கள் புதைக்கப்பட்ட விதம் மற்றும் அந்த இடத்தின் வரலாறு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியத் தடயவியல் சார்ந்த விசாரணை தேவை என்று அகழ்வாராய்ச்சியில் பணியாற்றும் அவர்களின் தகவலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே அதிகளவிலான உடல்கள் மீட்டெடுக்கப்பட்ட ஒரு இடத்தில், இத்தகைய விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான நிபுணத்துவம் இலங்கையிடம் இல்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, இந்தத் தகவலாளர்கள் பெயரைக் குறிப்பிடவோ, அல்லது பின்னணித் தகவலாகவோ கூடப் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை. இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து என் சக ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட அறிக்கையிடலிலும் மற்றும் தெரிவித்த கருத்துகளிலும், தடயவியல் மையப்படுத்தப்பட்ட விசாரணைகளின் அவசியம் குறித்து அமைதி காத்து வருவது இன்னும் முக்கியமானது. அவர்கள் எனக்குக் கூறிய தகவல்கள் சோமதேவவின் அறிக்கையைச் சரியான சூழலில் புரிந்துகொள்வதற்கும், இந்தச் செயல்பாட்டில் தடயவியல் நிபுணத்துவத்தின் இன்றியமையாத தேவையை உணர்த்துவதற்கும் உதவுகின்றன.
அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? ஏனெனில், அவர்கள் தொடர்ச்சியான இணையவழி அச்சுறுத்தல்கள், இனவாத ஏச்சுப் பேச்சுகள் மற்றும் மிரட்டல்களுக்கு இலக்காகியுள்ளனர். மிகக் குறைந்த சமூக அல்லது ஊடகத் துறை ஆதரவுடன் அவர்கள் இந்த மிரட்டல்களைச் சகித்துக்கொண்டுள்ளனர். தொடர்ச்சியான இணையவழித் தாக்குதல்கள் நிறைந்த இத்தகைய சூழலில், பாதுகாப்பான மற்றும் தொழில்முறை முறையில் செய்தி சேகரிப்பதற்கான விழிப்புணர்வும் திறன்களும் அவர்களிடம் இல்லை.
அவர்களின் மூச்சுத்திணறல் உணர்வை அதிகரிக்கும் விதமாக, அரச அதிகாரிகளின் விசாரணைகளையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்; இது ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி, அவர்களை இன்னும் பின்வாங்கச் செய்துள்ளது.
“நான் சமீபகாலமாக செம்மணி பற்றி அதிகம் பேசுவதோ எழுதுவதோ இல்லை, ஏனெனில் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அதன் தாக்கம் குறித்த கவலைகள் காரணமாக நான் சுய தணிக்கைக்கு (self-censored) ஆளாகியுள்ளேன்,” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
அவர் மட்டுமே அப்படி இல்லை. மற்றொருவர் என்னிடம், “இப்போதும் என்னிடம் சில தகவல்கள் உள்ளன, ஆனால் பகிர்வதற்குப் பயமாக இருக்கிறது” என்றார். இவர்களனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அகழ்வாராய்ச்சி தளத்தில் செய்தி சேகரிப்பதில் 200 நாட்களுக்கு நெருக்கமாகச் செலவிட்டுள்ளனர்.
தளத்தில் இருந்து கள அனுபவத்துடன் செய்தி சேகரிக்கும் இந்த அறிக்கையிடல் குரல்கள் அடக்கப்படுவதையே நாம் இப்போது காண்கிறோம். டிஜிட்டல் ரீதியிலான பாதிப்புகள் மூலம் அவர்கள் முதலில் முடக்கப்பட்டு, பின்னர் பொது அறிக்கையிடல் வெளியை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். விமர்சனப்பூர்வமான அறிக்கையிடலுக்குப் பதிலாக, ஊகங்களும் இனவாதக் குப்பைகளுமே நமக்குக் கிடைக்கின்றன.
அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுவதால், மரணங்களுக்கு ‘தொற்றுநோய் மற்றும் இயற்கை அனர்த்தமே’ காரணம் என்பதை முன்னிலைப்படுத்தும் பிற குரல்கள் இணைய வெளியில் அலைகள் போல உலா வருகின்றன.
நாம் செம்மணி அகழ்வாராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே இருக்கிறோம். அங்கு ஏன் இத்தனை உடல்கள் புதைக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் இன்னும் அருகில் கூட வரவில்லை.
1999-ஆம் ஆண்டில், தண்டனை பெற்ற சிறுவர் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றவாளி ஒருவர் அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அது நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் புதைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்திய பிறகே அகழ்வாராய்ச்சிகள் தூண்டப்பட்டன என்பதை நாம் நிச்சயமாக அறிவோம். குறைந்தது இரண்டு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அவரது வாக்குமூலம் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அவர் கொலைகள் பற்றிய விவரங்களைக் கொடுத்ததுடன், அதற்குப் பொறுப்பானவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். இந்தத் தொடர்புகளுக்குத் தொழில்முறை விசாரணைகள் தேவை.
இனவாதத்தின் இரைச்சலால் அமைதியாக்கப்படாமல், விமர்சனப்பூர்வமான அறிக்கையிடல் செழித்து வளர்வதற்கேற்ற கட்டமைப்புகளையும் நாம் உருவாக்க வேண்டும்.