இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை நிறுத்தி வைப்பதற்கான இடமின்றி வடபகுதி துறைமுகங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
வடபகுதியின் சில துறைமுகங்கள் 90 வீதம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளால் நிரம்பியுள்ளதாக மேலும் படகுகளை பறிமுதல் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச ஆண்டுதோறும் 60 முதல் 70 படகுகள்; பறிமுதல் செய்யப்படுவதாகவும் சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவற்றை மீன்பிடித்துறைமுகங்களில் தடுத்துவைத்திருப்பது பெரும் சவாலாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சட்டநடவடிக்கைகள் முடிவடையும்வரை இந்த மீன்பிடி படகுகளை துறைமுகங்களிலேயே வைத்திருக்க வேண்டும்,இவை பெரிய படகுகள் என்பதால் இவற்றை நீரிலிருந்து மேலே தூக்கி கரைக்கு இழுத்துவருவதும் கடினம், மயிலிட்டி துறைமுகத்தில் மாத்திரம் 130 முதல் 150 வரையிலான படகுகள் உள்ளன.
தங்களது மீன்பிடி படகுகள் பாதிக்கப்படுவது குறித்து உள்ளுர் மீனவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்
இலங்கையின் கடல்எல்லையை மீறி மீன்பிடி படகுகள் நுழைவதை தடுப்பதற்கு கைதுசெய்தல் தடுத்துவைத்தல் ஆகியவற்றிற்கு அப்பால் வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,எல்லை தாண்டி வரும் ஒவ்வொரு படகையும் தடுத்துநிறுத்துவது எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறை சாத்தியமற்ற விடயம்.
இருப்பினும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்துள்ளது,நாங்கள் தீர்வுகளை காண இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.