இலங்கையின் போர் விதவைகளும் காணாமல் போனவர்களைத் தேடும் நீண்ட பயணமும்

 

AFP 

 நவம்பர் 1, 2026, 04:38

 

 

 

தேவாலயம் ஒன்றின் வெளியே அமர்ந்திருக்கும் சரதாதேவி தட்சணாமூர்த்தி, கையால் எழுதப்பட்ட நான்கு பக்க பெயர்களை வாசிக்கிறார் — இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் போன 124 கணவர்கள், தந்தையர்கள் மற்றும் சகோதரர்களின் பெயர்கள் அதில் உள்ளன.

அறுபதுகளில் உள்ள அந்தத் தமிழ் பெண், பின்னர் ஒரு பதாகையை ஏந்தியவாறு, பரபரப்பான கிழக்கு நகரமான மட்டக்களப்பில் மற்ற மூவருடன் இணைந்து “நீதிக்கான பேரணியை”த் தொடங்கினார் — இது அவர்களின் 1,604 வது தொடர்ச்சியான போராட்ட நாளாகும்.

1983 முதல் 2009 வரை, சிங்கள பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கப் படைகளுக்கும், பெரும்பாலும் இந்து சிறுபான்மையினரான தமிழ் தனிநாட்டு  பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரினால் இலங்கை உருக்குலைந்தது.

ஐநா மதிப்பீடுகளின்படி, பல பொதுமக்கள் உட்பட 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினரால் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் (LTTE) பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர், கடத்தப்பட்டனர், சித்திரவதைக்கு உள்ளக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.

போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலோரின் கதி என்னவென்பது இன்னமும் அறியப்படவில்லை.

முறையீடுகள், நீதிமன்ற மேல்முறையீடுகள், போராட்டங்கள், சர்வதேச அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அரசாங்க வாக்குறுதிகள் ஆகியவை மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே தந்துள்ளன.

போரின் கொடூரங்களையும், பதில்களைத் தேடும் குடும்பங்களின் நீண்ட பயணத்தையும் தட்சணாமூர்த்தியின் கதை பிரதிபலிக்கிறது.

ஜூலை 1992 இல், அவரது கணவர் நல்லதம்பி (34) தலையில் சுடப்பட்டு அவரது வயலில் இறந்து கிடந்தார்.

ஒரு இராணுவ வீரர்தான் அவரைக் கொன்றதாக சாட்சிகள் தெரிவித்தனர். அவரது மனைவி உடனடியாக அந்த இராணுவ வீரர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

“உங்கள் கணவர் ஒரு இராணுவ வீரரால் கொல்லப்பட்டதாக நீங்கள் கூறினால், அவர்கள் அவரை எப்போதுமே உங்களுக்குத் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினர்” என்று அவர் கூறினார்.

“ஆகையால், நான் ஒரு அறியப்படாத நபருக்கு எதிராக புகார் அளிப்பதில் முடித்துக்கொண்டேன். நான் அவரது உடலைக் கைப்பற்றினேன், 50,000 ரூபாய்  இழப்பீட்டைப் பெற்றேன், விசாரணை முடிவுக்கு வந்தது.”

ஜனவரி 2000 இல், அவரது 19 வயது மகன் நவீநேதன் காணாமல் போனார். தமிழ் கிளர்ச்சியாளர்கள் அவனைத் தங்கள் படைகளில் சேர்ப்பதற்காகக் கடத்தியதாக அவர் நம்புகிறார்.

“நான் அவரை மீண்டும் பார்க்கவே இல்லை,” என்று அவர் கூறினார். “2016 ஆம் ஆண்டில், அதிகாரிகளிடம் தகவல் கோரி விண்ணப்பித்தேன். அவனது கதி என்னவென்று தெரியவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர். எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் ஒரு காணாமல் போனமைக்கான சான்றிதழ் மட்டுமே — உண்மை அல்ல.”

இதேபோல் லக்ஷ்மி சில்வாவும் எத்தகைய உறுதியையும் கண்டறியவில்லை.

ஜூலை 1990 இல், கொழும்புக்குப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரது கணவர் காணாமல் போனார். சோதனைச் சாவடியில் ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.

கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும் வகையில், “அவர்கள் ‘புலிகள்’ என்று சாட்சிகள் என்னிடம் கூறினர்” என்றார் அவர்.

காவல்துறையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் அவர் செய்த மேல்முறையீடுகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர் அணுகியவர்கள் தொல்லை கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.

1994 ஆம் ஆண்டில், நீதவான் ஒருவர் மரணச் சான்றிதழை வழங்கினார். இறப்புக்கான காரணம் “தெரியவில்லை” என்று பட்டியலிடப்பட்டிருந்தது. அன்று முதல், எதுவுமில்லை.

“அவர் திரும்பி வருவார் என்று நான் இனி நினைக்கவில்லை,” என்று லக்ஷ்மி சில்வா ஒப்புக்கொண்டார். தற்போது அறுபதுகளில் உள்ள அவர், வாழ்க்கையைத் தொடர முயன்றுள்ளார்.

“இப்போது நான் என் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறேன்” என்றார் அவர்.

மற்றவர்களோ மௌனத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

“நான் எப்போதும் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை” என்றார் ராஜேஸ்வரி சித்திரவடிவேல் (61).

அவரது சுவரில், தனது மனைவிக்கும் மகனுக்கும் இடையில் புன்னகைத்தவாறு மீசையுடன் இருக்கும் ஒரு மனிதனின்  ஓவியம் தொங்குகிறது. அவரது கணவர் பிப்ரவரி 1989 இல், முகமூடி அணிந்த நபர்களால் கடத்தப்பட்டார்.

அதிகாரிகள் 1998 ஆம் ஆண்டில் அவருக்கு மரணச் சான்றிதழை வழங்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) ஒருவரின் உடலை அடையாளம் காண்பதற்காக அவரிடம் வழங்கியது, அது அவரது கணவராக இருக்கலாம் என்று கூறியது.

“அவர் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தார்,” என்று அவர் கூறினார். “ஆகவே நான் தொடர்ந்து நம்புகிறேன்.”

இது போன்ற வழக்குகளுக்காகத்தான், அர்ஜென்டினாவின் ‘பிளாசா டி மாயோ தாய்மார்களை’ (Mothers ofநாட்டு Plaza de Mayo) நினைவூட்டும் வகையில், நாட்டின் 1976-1983 சர்வாதிகார ஆட்சியின் கீழ் காணாமல் போன குழந்தைகள் குறித்து பதில்களைக் கோரி பல ஆண்டுகளாக அணிவகுத்துச் சென்றவர்களைப் போல, இந்தப் பெண்களும் தங்கள் தினசரிப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

 

Senthilvel Sothiladchumi, an ethnic Sri Lankan Tamil, center, whose son went missing during the Sri Lankan civil war, cries as she leaves the site of a mass grave where authorities exhibited unearthed belongings in an effort to secure the identities of the victims, in Chemmani, Sri Lanka, Aug. 5, 2025.

“ஆயிரக்கணக்கான மக்கள் எங்களுடன் இணைவார்கள் என்று நாங்கள் இரகசியமாக நம்பினோம், ஆனால் வெளிப்படையாக அது நடக்கவில்லை” என்று
போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும்  ஒருவரான சரளா எமானுவல் கூறினார்.

“ஆனால் எதுவும் மாறவில்லை — இப்போதும் பெரும் மௌனமே நிலவுகிறது” என்றார் அவர்.

2009 ஆம் ஆண்டு முதல், இலங்கையின் குடிமைச் சமூகமும், சர்வதேச உரிமைக் குழுக்களும், ஐக்கிய நாடுகள் சபையும் போர்க்காலக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தும்படி அடுத்தடுத்த அரசாங்கங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நம்பிக்கையை மீட்டெடுத்தது.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டின் முதல் இடதுசாரி ஜனாதிபதி “அரசியல் படுகொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் தாக்குதல்கள்” குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஒரு சுயாதீன தேசிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் (Independent National Prosecutor’s Office) திறக்கப்படும் என்றும் வாக்களித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) செப்டம்பரில் தெரிவித்தபடி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனினும் “தண்டனை வழங்காமல் விடுவதைத் தவிர்க்கும் அவசரத் தேவையை” நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் தவறிவிட்டது.

முன்மொழியப்பட்ட சுயாதீன அரசுத்தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் குறித்து AFP எழுப்பிய கேள்விகளுக்கு நீதி அமைச்சு பதிலளிக்கவில்லை.

 

“ஒன்று அல்லது இரண்டு முக்கியமான வழக்குகளில், சில விசாரணைகள் நடப்பது போல் தெரிகிறது… ஆனால் பலவந்தமாக  காணாமல் போதல்கள் அல்லது காணாமல் போன நபர்கள் குறித்த கேள்விகளில், துளி கூட நகர்வு இல்லை” என்றார் தமிழ் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்.

 

பெரும்பாலானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதாலும், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாலும், “எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அடுத்தடுத்த அரசாங்கங்கள் அஞ்சுகின்றன” என்று அவர் கூறினார்.

“இது தங்களையே வந்து தாக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்” என்றார் அவர்.

2018 ஆம் ஆண்டில், காணாமல் போனவர்களின் கதியைத் தீர்மானிக்கும் பொறுப்புடன், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை (OMP) அரசாங்கம் ஸ்தாபித்தது.

தற்போது தங்களது பதிவுகளில் 22,000 வழக்குகள் இருப்பதாக அது கூறுகிறது, அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை 100,000 வரையிலான காணாமல் போனோர் தொகையைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், அந்த அலுவலகம் வெறும் 24 பேரைக் மட்டுமே கண்டுபிடித்துள்ளது.

“இரண்டு, சில நேரங்களில் மூன்று தசாப்தங்களாகக் காத்திருக்கும் குடும்பங்களைப் பொறுத்தவரை, காரியங்கள் போதுமான வேகத்தில் நகரவில்லை என்பது தெளிவாகிறது” என்று அந்த அலுவலகத்தின் உறுப்பினரான மிராக் ரஹீம் ஒப்புக்கொண்டார்.

“சாட்சிகளைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது,” என்றார் அவர். “பல ஆவணங்கள் மறைந்துவிட்டன, மேலும் மக்கள் தங்கள் நினைவுகளை மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர்.”

களைப்படைந்த போதிலும் உறுதியுடன் இருக்கும் தட்சணாமூர்த்தி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளிக்கிறார்.

“எங்களுக்குப் பணம் வேண்டாம், உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும்” என்றார் அவர். “எங்கள் துன்பம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

SAJITH X
இலங்கையே, நமது பெயரில் பாராளுமன்றம் என்ன செய்ய அனுமதிக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
court-judge-hammer-gavel-696x398
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவிட்ட கம்பஹா நீதவான் இடமாற்றம்
batti mayi
மயிலத்தமடு–மாதவனையில் மீண்டும் பசு கொலை! துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசு மீட்பு!
psta no12
மாண்புமிகு அனுரகுமாரதிசநாயக்க அவர்களே-
Sajith-Premadasa-2 (1)
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் தலையிடுகின்றது – சஜித்
police custody death1
பொலிஸ்காவலில் உயிரிழப்புகள் -2020 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 86
Jaffna boats_pasan-tilakawardana-jkaLhUQhHO0-unsplash
கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளை நிறுத்திவைப்பதற்கு வடபகுதி துறைமுகங்களில் இடமில்லை – மயிலிட்டியில் 150 படகுகள்
rajeevkanth nove
ஒரு அடக்குமுறையான சூழலை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்
duminda 112
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில்தான் அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்- துமிந்த நாகமுவ
jordan embas
ஜோர்தானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் -பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு