வொஷிங்டன் டி.சி.யிலுள்ள உடற்பயிற்சி நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு வெடித்த தருணத்தை அங்கு சென்றிருந்தவர்கள் விவரித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு ஆரம்பமானபோது தான் ‘விடா’ (Vida) உடற்பயிற்சிக் கூடத்திலுள்ள ஓடுதள இயந்திரத்தில் (treadmill) பயிற்சி செய்து கொண்டிருந்ததாக மைக்கேல் கார்னி (Michael Carney) ‘வொஷிங்டன் சன்’ (Washington Sun) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
“ஒரு வெடிச் சத்தம்” கேட்டதாகவும், அதனை உடற்பயிற்சிப் பந்து (exercise ball) வெடித்த சத்தம் என்றே தான் முதலில் நினைத்ததாகவும், அதன் பின்னரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதாகவும் அவர் கூறுகிறார்.
“அங்கிருந்த அனைவரும் பூந்தொட்டிகள் மற்றும் ஏனைய பொருட்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்” எனக் கூறிய அவர், அப்போது தீ அபாய எச்சரிக்கை மணி (fire alarm) ஒலிக்கவிடப்பட்டதையும் விவரித்தார்.
உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியே வந்ததும், அருகிலுள்ள ஒழுங்கையிலிருந்து ஐந்து அல்லது பத்துத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக கார்னி தெரிவித்தார்.

பெண்கள் உடை மாற்றும் அறையிலிருந்து “மிகப் பலத்த சத்தம்” ஒன்றைக் கேட்டதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியேயும் மேலும் பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் மற்றுமொரு சாட்சி ‘வொஷிங்டன் சன்’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
“ஏதோ ஒன்று மோதி விழுந்துவிட்டதாகவே நான் நினைத்தேன். அது துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் என்பது எனக்குப் பின்னரே தெரியவந்தது” என அவர் கூறினார்.