போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் – இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?

TAMIL GUARDIAN

 

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட மனித உரிமைத் தடைகள் பொறிமுறைக்குப் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, போர்க்குற்றங்களுக்காகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரிட்டனால் இப்போது முதன்முறையாகத் தடைகளை விதிக்க முடியும்.

தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படும் இலங்கைத் தளபதிகளுக்கு எதிராகவும் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படக்கூடும்.

2026 ஆம் ஆண்டின் ‘உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத் தடைகள் ஒழுங்குவிதிகள்’ (Global Human Rights and International Humanitarian Law Sanctions Regulations 2026), 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொறிமுறைக்குப் பதிலாக நடைமுறைக்கு வந்துள்ளன.

பழைய பொறிமுறையானது வாழும் உரிமை, சித்திரவதையிலிருந்து விடுபடும் உரிமை மற்றும் அடிமைத்தனம் மற்றும் கட்டாய உழைப்பிலிருந்து விடுபடும் உரிமை ஆகியவற்றின் பாரதூரமான மீறல்களுக்கு மட்டுமே தடைகளை விதிக்க அனுமதித்தது.

புதிய விதிகள் மூன்று புதிய அடிப்படைகளைச் சேர்க்கின்றன: சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள், மனிதாபிமான உதவிகளை வழங்குவதை அல்லது அதனை அணுகுவதைத் தடுத்தல், மற்றும் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கான உரிமையின் பாரதூரமான மீறல்கள்.

இந்த ஒழுங்குவிதிகள் அக்டோபர் 15 ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததோடு, நவம்பர் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.

பிரபுக்கள் சபையும் (House of Lords)  கவலைதெரிவிக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியவாறே இவற்றிற்கு ஒப்புதல் அளித்தது. தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் போல, தனித்தனியாகப் பெயர் குறிப்பிடாமல் ஒரு முழுப் பிரிவினரையும் (class of people) பொதுவான விளக்கத்தின் அடிப்படையில் தடை செய்யவும் இவ்விதிகள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன என ‘ரிட்ரெஸ்’ (REDRESS) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

மேற்குக் கரையில் இஸ்ரேலின் குடியேற்ற விரிவாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் எட் மிலிபாண்ட் செப்டம்பர் மாதம் இந்த மாற்றத்தை முதன்முதலில் அறிவித்தார். இது ‘உலகெங்கிலும் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்குப் பிரிட்டன் விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதைக் குறிக்கும் ஒரு முக்கியமான படி’ என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைத்துள்ள அதேவேளை, தடைகள் ஒருபோதும் குற்றவியல் வழக்குகளுக்கு மாற்றாக அமையக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

Ed Miliband

 

‘இத்தகைய தடைகள் குற்றவியல் பொறுப்புக்கூறலிலிருந்து வேறுபடுத்திக் கையாளப்படுவது முக்கியம்’ என அந்த அமைப்பு கூறியுள்ளது. ‘கடந்த கால அல்லது நிகழ்கால சர்வதேசக் குற்றச் செயல்களுக்கான பொறுப்புக்கூறல், நியாயமான விசாரணைகள் உள்ளிட்ட குற்றவியல் நீதி மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.’

முதல் பயன்பாடு

பிரிட்டன் இந்த மாதத்தில் ஏற்கனவே இருமுறை தனது புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. காசாவுக்கான உதவித் தொடரணிகளைத் தடுத்ததற்காக, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்களைக் காரணம் காட்டி, நவம்பர் 17 ஆம் திகதி எட்டு இஸ்ரேலியக் குடியேற்ற நிர்மாணிப்பாளர்கள் மற்றும் ‘சாவ் 9’ (Tzav 9) என்ற செயற்பாட்டாளர் குழு மீது அது தடைகளை விதித்தது. நவம்பர் 23 ஆம் திகதி, ரோஹிங்கியா இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்ததோடு இணைந்து, சின் மாநிலத்தில் (Chin State) கைதிகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக மியன்மார் பிரிகேடியர் ஜெனரல் ஒருவர் மீது புதிய பொறிமுறையின் கீழ் தடை விதித்தது.

இலங்கையின் தளபதிகள்

2025 மார்ச் மாதம், பழைய பொறிமுறையைப் பயன்படுத்தி நான்கு இலங்கையர்கள் மீது பிரிட்டன் தடை விதித்தது: முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் துணை இராணுவக் குழுத் தலைவர் கருணா ஆகியோரே அவர்களாவர்.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்காக அவர்கள் தடை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் மையப்பகுதியை இந்தப் புதிய அடிப்படைகள் தொடுகின்றன.

இலட்சக்கணக்கான தமிழர்கள் சிக்கியிருந்த வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘சூடு தவிர்ப்பு வலயங்கள்’ (No Fire Zones) மீது இலங்கைப் படைகள் மீண்டும் மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், வன்னிக்கான உணவு மற்றும் மருந்துகளை அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும் நம்புவதற்குப் போதிய காரணங்கள் இருப்பதாக ஐ.நா. விசாரணைகள் கண்டறிந்துள்ளன; இத்தகைய நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை. இதுவரை, வைத்தியசாலைகள் மீது குண்டுவீசியதும் மனிதாபிமான உதவிகளை மறுத்ததும் பிரிட்டனின் மனித உரிமைத் தடைகளின் வரம்பிற்கு வெளியே இருந்தன.

இந்தப் பொறிமுறையை ‘கொள்கை ரீதியாகவும் சீரான முறையிலும்’ நடைமுறைப்படுத்துமாறும், போர்க்குற்றங்கள் ‘எங்கு நிகழ்ந்தாலும், யாரால் நிகழ்த்தப்பட்டாலும்’ அவற்றைத் தனது சொந்த நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறும் பிரிட்டனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்