பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைக்கூடத் தடுக்கும் உங்களால் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றில் 26.11.2026இன்று நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சின்மீதான 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது சபையை தலைமையேற்று நடாத்திக்கொண்டிருந்த பொதுஜனபெரமுனுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட “வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்ற பெயரில் இங்கே பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதற்குரிய உரிய முடிவுகளை எடுப்பதற்குச் செயலாளர் குழுவிடம் தாம் முன்மொழிவதாகத் தெரிவித்திருந்தார்.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே….
மழைபொழிந்திடும் காரத்திகை மாதத்திலே…
மங்களம் தங்கிடும் நேரத்திலே….
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே….
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் தலைவனாக, இறைவனாக இரண்டறக் கலந்துள்ள தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் இதன்போது சபையைத் தலைமைதாங்கிக்கொண்டிருந்த மொட்டுக்கட்சி உறுப்பினரான சாணக்க மாதுகொட “வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்ற பெயரில் இங்கே பிறந்தநாள் கொண்டாடுவதற்காகப் பாராளுமன்றத்திற்குள் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே இது குறித்து முடிவு எடுப்பதற்குச் செயலாளர் குழுவிடம் தாம் முன்மொழிவதாகத் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் இனத்தினை நீங்கள் எவ்வளவு வெறுக்கின்றீர்கள் என்பதற்கு உதாரணம் இதுவாகும்.
தற்போது ஆளுங்கட்சி 159பேருடன் இனவாதம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிரபாகரனின் பெயர்தான் உங்களுக்கு பெரிய தலையிடியாக இருக்கின்றது.
தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்தநாளுக்கு பெயரைப்பாவிக்கும்போதுகூட தாங்கள் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றீர்கள் எனில், எவ்வாறு நீங்கள் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கப்போகின்றீர்கள். என்பதுதான் எமது கேள்வியாக உள்ளது.
இலங்கைநாட்டில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களே உள்ளனர். அனைவரும் சகோதரத்துவத்துடனே செயற்படுகின்றனர்.
இந்நிலையில் பிரபாகரன் அவர்களது பெயரைத் தாங்கள் சொல்லக்கூடாது என்று சொல்கின்றீர்கள் எனில், பிரபாகரன் என்றால் நீங்கள் எவ்வளவு தூரம் பயந்துபோயுள்ளீர்கள் என்பதை உணரமுடிவதாகத் தெரிவித்தார்.
இதன்போது சானக மாதுகொட தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தாம் ஆசனப் பொறுப்பில் இருந்த வேளையில், பாராளுமன்ற உறுபிப்பினர் ரவிகரன் குறிப்பிட்ட ஒரு சொல்லை ஹன்சார்டில் (Hansard) பதிவு செய்ய வேண்டாம் என்று செயலாளர் குழுவிடம் முன்மொழிந்துள்ளேன். ஆசனத்தில் இருக்கும் நான் எடுக்க வேண்டிய ஒரு கட்டளையைச் செயல்படுத்துவது குறித்துச் செயலாளர் குழு தீர்மானிக்கும்.
அதேபோல, ‘ஈழம்’ என்ற சொல் பலமுறை குறிப்பிடப்படுகிறது. அந்தப் பொருள் குறித்துச் செயலாளர் குழு ஒரு தீர்மானம் எடுத்து, அந்தச் சொல்லையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவுந் தெரிவித்தார்