கொழும்பு, நவம்பர் 28, 2026
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதனைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எவ்விதக் கொள்கைகளும் இல்லை என்றும், அது ஒரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவ முன்முயற்சி அமைப்பின் (Equality Initiative) ‘வோர்டெக்ஸ்’ (VORTEX) 5 ஆவது தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை “மிகச் சிறந்தது” எனப் புகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி, “இந்தத் தற்போதைய அரசாங்கத்திடமும், மிகவும் சிறப்பான அந்த ஊழல் ஒழிப்பு விடயத்தைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லை என்பதே எனது முறையீடாகும். வேறு எதுவுமே இல்லை. மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தொடர்ந்து தூண்டுவதைத் தவிர, அவர்களிடம் வேறொன்றும் இல்லை,” எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்த குமாரதுங்க, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் எனக் காத்திருக்க வேண்டாம் என வலியுறுத்தினார். “நீங்களே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். பாராளுமன்றத்தில் இருப்பவர்களும் பல்வேறு கட்சிகளில் இருப்பவர்களும் தலைமைத்துவத்தை எடுப்பார்கள் எனக் காத்திருக்காதீர்கள்,” எனக் கூறிய அவர், கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எவ்வாறு கேட்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தனது முழுமையான திறனை அடையத் தவறியமைக்குச் சமத்துவமின்மையும், ஒருமித்த தேசத்தை உருவாக்க முடியாமல் போனமையுமே அடிப்படைக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு நாடு. அவற்றில் பல இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. கல்வி மற்றும் சுகாதார முறைமைகளால் மிக உயர்ந்த மட்டத்தில் வளர்ச்சியடைந்த மனித வளத்தையும் நாம் கொண்டுள்ளோம். ஆனால், தற்போது உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாக நாம் உள்ளோம். சுருக்கமாகச் சொன்னால், எம்மால் ஒரு தேசத்தை உருவாக்க முடியாமல் போனமையே இதற்கு நிச்சயமான காரணமாகும்,” என அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பியசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னைய பாராளுமன்றம் ஒன்றில் சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பைக் கொண்டிருந்ததாகவும், பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக் கூட நிறைவு செய்திருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளைத் தாண்டி அனைத்துப் பிரஜைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சமத்துவமின்மையே இலங்கை உண்மையான உன்னத நிலையை அடைவதைத் தடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.