பிரதமர் ஹரிணி அமரசூரிய , கொழும்பு மாவட்டத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்றும், வளர்ச்சித் திட்டத்தின் பெயரில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு குடியிருப்பு கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் முடிவில் ஊடகங்களிடம் உரையாற்றிய போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“சரியான திட்டமிடல் மற்றும் விதிமுறைகள் குறித்த புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள், அத்துடன் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான முடிவுகள் காரணமாகவே கொழும்பு மாவட்டம் இந்த அளவிற்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இது மாவட்டத்தையும் அதன் மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் கடுமையான உயிர் மற்றும் உடமை இழப்புக்களைச் சந்தித்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களை நிர்வகிப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
“இன்றைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதும் இந்த விடயம் விசேட கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பில் உள்ள மக்களின் வாழ்க்கையில் வருடாந்த வெள்ளப்பெருக்கு என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாற நாம் அனுமதிக்க முடியாது. மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான ஒரு பொதுவான திட்டத்தை முன்வைக்க அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படும், அதற்கேற்ப அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகளை வழங்குவது குறித்து ஏற்கெனவே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.