2011-ஆம் ஆண்டின் இதே நாளில், தென் ஆப்பிரிக்காவில் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இலங்கை அணி ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியடைந்த பிறகு, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முன்னாள் அணித்தலைவர் கெப்லர் வெசல்ஸ் (Kepler Wessels), ஒரு கவுண்டி ‘ஏ’ (County A) அணி கூட இந்த இலங்கை அணியைத் தோற்கடித்துவிடும் என்று விமர்சித்திருந்தார். இருப்பினும், ஒரு வாரத்திற்குப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவை இலங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தென் ஆப்பிரிக்க மண்ணில் இலங்கை பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும்.

இலங்கையின் இந்த வெற்றியில் திலான் சமரவீர முதல் இன்னிங்ஸில் ஒரு சதத்தையும், குமார் சங்கக்கார இரண்டாவது இன்னிங்ஸில் மற்றுமொரு சிறப்பான சதத்தையும் அடித்து முக்கியப் பங்காற்றினர். அறிமுக வீரராகக் களமிறங்கிய தினேஷ் சந்திமால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, சானக்க வெலகெதர முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முதல் இன்னிங்ஸில் 30 ஓட்டங்களையும் பெற்ற ரங்கன ஹேரத் ‘ஆட்டநாயகன்’ விருதைப் பெற்றார்.

இந்த அற்புதமான வெற்றிக்குப் பிறகு, இலங்கை அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் கெப்லர் வெசல்ஸுக்கு நன்றி தெரிவிக்கையில், “நாங்கள் உண்மையில் கெப்லர் வெசல்ஸுக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர் எங்களுக்கு ஒரு உந்துதலை (Motivation) அளித்தார். திரு. வெசல்ஸுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று கூறினார்.
