சர்வதேச வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சரிவு ஆகியவை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இருக்கும் முக்கிய அபாயங்கள் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
தனது சமீபத்திய ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட’ (World Economic Outlook) அறிக்கையில் இக்கருத்துக்களை முன்வைத்துள்ள IMF, உலகப் பொருளாதாரம் தற்போதைக்கு “நிலையாக” இருப்பதாகவும், இந்த ஆண்டு அதன் வளர்ச்சி “தாங்குதிறன்” (Resilient) கொண்டதாக இருக்கும் என்றும் விவரித்துள்ளது. மேலும், உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு மத்திய வங்கிகளின் சுதந்திரம் “மிகவும் முக்கியமானது” என்றும் அந்த நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார கண்காணிப்பு அமைப்பான IMF, உலகப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.3% ஐ எட்டும் என்று கணித்துள்ளது. இது அதன் முந்தைய 3.1% கணிப்பை விட அதிகமாகும். இருப்பினும், 2027 இல் இந்த வளர்ச்சி 3.2% ஆகச் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசி (BBC) ஊடகத்திடம் பேசிய IMF இன் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கௌரின்சாஸ் (Pierre Olivier Gourinchas) கூறுகையில்:
“உலகப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது — இது மிகப்பெரிய வளர்ச்சி விகிதங்கள் அல்ல என்றாலும், மிகவும் உறுதியாகவும் தாங்குதிறனுடனும் உள்ளது. ஒரு வகையில், உலகப் பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டின் வர்த்தக இடையூறுகளை உதறித் தள்ளிவிட்டு, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முன்னேறி வருகிறது.”
ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் (Tariffs) உலகளாவிய பொருளாதாரச் செயல்பாடுகளை “நிச்சயமாக மெதுவாக்கியுள்ளன” என்று குறிப்பிட்ட அவர், ஆனால் மற்ற சில காரணிகள் அந்தப் பாதிப்புகளை ஈடுசெய்துள்ளன என்றும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான முதலீடுகளின் அதிகரிப்பு உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு “சாதகமான காற்றாக” (Tailwinds) அமைந்துள்ளதாக IMF அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், உலகப் பொருளாதாரத்திற்கான அபாயங்கள் இன்னும் “சரிவை நோக்கியே” (Tilted to the downside) உள்ளதாக எச்சரித்துள்ள IMF, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் அளவுக்கு அதிகமானதாக இருந்தால், அது சந்தையில் ஒரு திடீர் சரிவைத் தூண்டக்கூடும் என்று கூறியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பங்குச் சந்தை உயர்வுகள் மக்களின் சொத்து மதிப்பில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதால், சந்தையில் ஏற்படும் ஒரு சிறிய சரிவு கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கௌரின்சாஸ் கூறினார். மேலும், நிறுவனங்கள் AI முதலீடுகளைச் செய்வதற்காக அதிகளவில் கடன் வாங்கி வருவது மற்றுமொரு புதிய அபாயமாக உருவெடுத்துள்ளது.
“மக்களின் வருமானத்தோடு ஒப்பிடும்போது அவர்களது சொத்து மதிப்பில் சந்தை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சந்தை சற்று வீழ்ச்சியடைந்தாலும் மக்கள் நுகர்வைக் குறைக்கத் தொடங்குவார்கள், நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை மாற்றிக்கொள்ளும். எனவே அங்கு ஒரு பலவீனம் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியின் முடிவு மட்டுமன்றி, “வர்த்தகப் பதற்றங்கள் மீண்டும் வெடிக்கக்கூடும், இது நிச்சயமற்ற தன்மையை நீடிக்கச் செய்து பொருளாதாரச் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும்” என்றும் IMF எச்சரித்துள்ளது.
“உள்நாட்டு அரசியல் பதற்றங்கள் அல்லது புவிசார் அரசியல் பதற்றங்கள் வெடிக்கக்கூடும், இது புதிய நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கி, நிதிச் சந்தைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் ஊடாக உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கக்கூடும்” என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் தனது திட்டத்தை எதிர்க்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த வார இறுதியில் விடுத்த அச்சுறுத்தலுக்கு முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இந்தக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.